அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து அவர் எம்.பி பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்களைத் தெரிவித்தன. காங்கிரஸ் கட்சியினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கூட்டணிக் கட்சி எம்.பிக்கள் கருப்பு உடையில் நாடாளுமன்றத்திற்கு வருகை புரிந்து தங்கள் எதிர்ப்புகளைத் தெரிவித்திருந்தனர். அதேபோல் தமிழகத்திலும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கருப்பு உடை அணிந்து தங்களது எதிர்ப்பை தெரிவித்திருந்தனர். இந்நிலையில் நாடாளுமன்ற குழு கூட்டத்திற்கு வந்திருந்த கார்த்தி சிதம்பரத்தை ராகுல் காந்தி கண்டு கொள்ளாமல் செல்வது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோ காட்சியில் எதிரே வரும் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரத்தை ராகுல் காந்தி கண்டுகொள்ளாமல் செல்வது போன்றும், 'ராகுல்ஜி ராகுல்ஜி' என அவரை சிலர் கூப்பிடுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளது.