புதுச்சேரியில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கரோனா தடுப்பு பணிகளும், கரோனா தடுப்பூசி போடும் பணிகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன. புதுச்சேரி துணைநிலை ஆளுநர் (பொறுப்பு) டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் சுகாதாரத்துறை அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள் ஆகியோருடன் கரோனா தடுப்பு பணிகள் குறித்து அவ்வப்போது ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில், புதுச்சேரி முழுவதும் கரோனா தடுப்பு நடவடிக்கையாக இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இருப்பினும் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அதனைக் கட்டுப்படுத்துவதற்கான 55 மணி நேர முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. நேற்று (23/04/2021) இரவு 10.00 மணிக்கு தொடங்கிய முழு ஊரடங்கு, வரும் திங்கள்கிழமை காலை 05.00 மணி வரை அமலில் இருக்கும். பால், மளிகை, இறைச்சிக் கடைகள், உணவகங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பணியில் இருப்போர் அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், புதுச்சேரியில் மக்கள் பயன்பாட்டிற்காகக் குறைந்த அளவிலான பேருந்து, ஆட்டோ உள்ளிட்டவை இயக்கப்படுகின்றன. முழு ஊரடங்கு காரணமாக கடற்கரை சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகள் மக்களின் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.