இந்திய பொருளாதாரம் எதிர்பாராத அளவில் சரிவை சந்தித்து வருகிறது. பொருளாதாரத்தில் ஏற்பட்டிருக்கும் மந்தநிலை இந்திய தொழில் துறையை மிகவும் கவலையடைய வைத்துள்ளது. மக்களின் பொருட்கள் வாங்கும் சக்தியும் குறைந்து வருகிறது. மேலும், வங்கிகளுக்கான வாரக்கடன்களால் வங்கிகளும் ஏகப்பட்ட நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகின்றன.
இந்த நிலையில், மூன்று வங்கிகளை இணைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்து பல்வேறு விவாதங்கள் நடந்த நிலையில், " பஞ்சாப் நேஷனல் வங்கி, ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ், யூனியன் பேங்க் ஆப் இந்தியா வங்கிகள் இணைக்கப்படும் " என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். ஏற்கனவே பேங்க் ஆப் பரோடா, விஜயா வங்கி, தேனா வங்கி ஆகியவை இணைக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக சிண்டிகேட் வங்கி மற்றும் கனரா வங்கியும் இணைக்கப்பட உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
நான்காவதாக, யூனியன் பேங்க் ஆப் இந்தியா வங்கியுடன் கார்ப்பரேஷன் வங்கி மற்றும் ஆந்திரா வங்கியும் இணைக்கப்படுகிறது. இதை தொடர்ந்து இந்தியன் வங்கி, அலகாபாத் வங்கியும் ஒரே வங்கியாக இணைக்கப்படுகிறது என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். வங்கிகள் இணைப்பதன் மூலம் நாடு முழுவதும் அவற்றுக்கான கிளைகள் விரிவடையும் என அவர் தெரிவித்துள்ளார். மேலும் , இணைக்கப்பட்ட வங்கிகள் மூலம் நாடு முழுவதும் வர்த்தகம் சிறப்பாக நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளார் நிர்மலா சீதாராமன்.