சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. பூபேஷ் பாகெல் முதல்வராக உள்ளார். இந்தநிலையில் அண்மையில் முதல்வர் பூபேஷ் பாகெலின் தந்தையான நந்தகுமார் பாகெல், கிராம மக்கள் கூட்டம் ஒன்றில் பேசுகையில், "இந்தியாவில் உள்ள அனைத்து கிராம மக்களிடமும் ஒன்றை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். பிராமணர்களை உங்கள் கிராமத்துக்குள் அனுமதிக்காதீர்கள். நாம் அனைவரும் பிராமணர்களைப் புறக்கணிக்க வேண்டும். அவர்களை மீண்டும் வோல்கா நதி பகுதிக்கே திருப்பி அனுப்ப வேண்டியது அவசியம்'' எனத் தெரிவித்தார்.
இது பெரும் சர்ச்சையானது. சர்வ பிராமணர்கள் சமாஜ் என்ற அமைப்பு, நந்தகுமார் பாகெலின் சர்ச்சை கருத்து தொடர்பாக சத்தீஸ்கர் காவல்துறையிடம் புகார் அளித்தது. இதனைத்தொடர்ந்து நந்தகுமார் பாகெலின் மீது சனிக்கிழமை இரவு சத்தீஸ்கர் காவல்துறை முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்தனர்.
இதற்கிடையே தனது தந்தை மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது குறித்துப் பேசிய முதல்வர் பூபேஷ் பாகெல், சட்டம் அனைவருக்கும் மேலானது என்றும், தனது தந்தையின் வார்த்தைகளால் வேதனை அடைந்ததாகவும் கூறியதோடு, இந்த விவகாரத்தில் காவல்துறை சட்டப்பூர்வமான நடவடிக்கையை உறுதி செய்யும் எனத் தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில் இன்று சத்தீஸ்கர் காவல்துறையினர், நந்தகுமார் பாகெலை அதிரடியாகக் கைது செய்து ராய்பூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியது, இதனைத்தொடர்ந்து ராய்பூர் நீதிமன்றம் நந்தகுமார் பாகெலை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.