தமிழ்நாடு - புதுச்சேரி எல்லையில் நடைபெற்றுவரும் கிரவுன் திட்டம் குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் கடந்த 5ஆம் தேதி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையில், ''தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி எல்லையில் அமைந்துள்ள ஆரோவில் பன்னாட்டு நகரத்தில் சர்ச்சைக்குரிய கிரவுன் திட்டத்தை செயல்படுத்துவதற்காக, அங்கு வாழும் மக்களின் எதிர்ப்பையும் மீறி 500க்கும் அதிகமான மரங்கள் வெட்டப்பட்டுவருகின்றன. சுற்றுச்சூழலுக்கும், ஆரோவில் பசுமைப் பரப்புக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய ஆரோவில் நிர்வாகத்தின் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது ஆகும்.
ஆரோவில் நகரத்தில் எந்தத் திட்டத்தை செயல்படுத்தினாலும், அதற்கு ஆரோவில் குடியிருப்பாளர்கள் அவையின் ஒப்புதல் பெறப்பட வேண்டும். ஆனால், இந்தத் திட்டத்திற்கு அத்தகைய ஒப்புதல் எதுவும் பெறப்படவில்லை. ஆரோவில் பன்னாட்டு நகரத்தின் சிறப்பே அதன் அமைதியும், பசுமையும் தான். புவிவெப்பமயமாதல் குறித்த அச்சம் உலகம் முழுவதும் பரவிவருகிறது. புவிவெப்பநிலை உயர்வை 1.5 டிகிரி செல்சியசுக்குள் கட்டுப்படுத்த வேண்டும் என்பதற்காக உலகம் முழுவதும் காற்று மாசுவைக் கட்டுப்படுத்தவும், அதிக அளவில் மரங்களை நட்டு வளர்க்கவும் பிரச்சாரங்கள் செய்யப்பட்டு வருகின்றன. இத்தகைய சூழலில் ஆரோவில் நகரத்தில் 500 பெரிய மரங்களை வெட்டுவதை ஏற்றுக்கொள்ள முடியாது'' எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், ''ஆரோவில் பகுதியில் எந்தக் காரணத்தைக்கொண்டும் இயற்கைவளம் அழிக்கப்படாது. கிரவுன் திட்டத்திற்காக அப்புறப்படுத்தும் மரங்கள் மாற்று இடத்தில் நடப்பட்டு வருகிறது. புதுச்சேரியில் பாரதியாருக்காக வானுயர சிலை அமைக்க வலியுறுத்தியுள்ளேன்'' எனத் தெரிவித்துள்ளார்.