Skip to main content

அயோத்தி ராமர் கோவிலைச் சுற்றி நிலங்கள் வாங்கியதில் முறைகேடு?; பக்தியை வைத்து விளையாடுகிறார்கள் - பிரியங்கா காந்தி!

Published on 23/12/2021 | Edited on 23/12/2021

 

PRIYANKA GANDHI VADRA

 

அயோத்தி நில வழக்கில் இராமர் கோவில் கட்ட உச்ச நீதிமன்றம் கடந்த 2019ஆம் ஆண்டு அனுமதியளித்தது. மேலும், இராமர் கோவில் கட்ட அறக்கட்டளை ஏற்படுத்தும்படி மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து, மத்திய அரசு ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா என்ற அறக்கட்டளையை அமைத்தது.இந்த அறக்கட்டளை கோவிலுக்காக நிலங்களை கையகப்படுத்தி வருகிறது. இதுவரை கிட்டத்தட்ட சுமார் 70 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதனையொட்டி அயோத்தியில் பலர் இராமர் கோவில் கட்டப்படும் இடத்தை சுற்றி இடம்வாங்க முயற்சித்து வருகின்றனர். கோவிலுக்கு அருகே நிலம் வாங்கினால், அந்த நிலங்களை கையகப்படுத்தும் ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையிடம் பெரிய விலைக்கு விற்கலாம் என்ற திட்டத்தோடு நிலம் வாங்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

 

இந்தநிலையில்,இராமர் கோயில் கட்ட உச்சநீதிமன்றம் அனுமதியளித்த பிறகு, எம்.எல்.ஏ.க்கள், மேயர், அயோத்தியா டிவிஷனல் கமிஷனர், வருவாய் அதிகாரிகள், டிஐஜி மற்றும் இவர்களது உறவினர்கள் என சுமார் 15 பேர், கோவிலைச் சுற்றி நிலம் வாங்கியுள்ளதாக ஊடகம் ஒன்று ஆதாரப்பூர்வ செய்தி வெளியிட்டுள்ளது. இதனையொட்டி இந்த நிலங்கள் வாங்கப்பட்டதில் முறைகேடு நடந்திருப்பதாகவும், அதிகாரத்தைப் பயன்படுத்தி நிலங்கள் வாங்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

 

இதனைத் தொடர்ந்து உத்தரப்பிரதேச அரசு, இந்த குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளது. இந்தநிலையில் டெல்லியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, இந்த நில முறைகேடு குற்றச்சாட்டுகளை உச்சநீதிமன்றம் விசாரிக்க வேண்டும் எனக் கோரியுள்ளார்.

 

இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இதுதொடர்பாக கூறியுள்ளதாவது: 2017-ம் ஆண்டு குறிப்பிட்ட நபருக்கு விற்கப்பட்ட நிலத்தை அந்த நபர் இரண்டாகப் பிரித்து விற்றுள்ளார். அந்த நபர் நிலத்தின்  முதல் பகுதியை 8 கோடி ரூபாய்க்கு நேரடியாக ராம் மந்திர் அறக்கட்டளைக்கு விற்றுள்ளார். இரண்டாம் பகுதியை (ராம் மந்திர் அறக்கட்டளைக்கு முதல் பகுதி விற்கப்பட்ட) 19 நிமிடங்களுக்குப் பிறகு ரவி மோகன் திவாரிக்கு என்பவருக்கு ரூ. 2 கோடி ரூபாய்க்கு விற்றுள்ளார். ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு, இந்த ரவிமோகன் திவாரி அந்த ரூ. 2 கோடி நிலத்தை ₹ 18.5 கோடிக்கு ராம் மந்திர் அறக்கட்டளைக்கு விற்கிறார். அடிப்படையில், ரூ.2 கோடிக்கு சற்று அதிகமான விலையுள்ள ஒரு நிலத்திற்கு அறக்கட்டளை 8 கோடி ரூபாயும், 18.5 கோடி ரூபாயும் அளிக்கிறது. இது ஊழல் இன்றி வேறு என்ன?

 

அந்த நிலம் பிரச்சனையில் இருக்கிறது. அந்த விவகாரத்தில் காவல்துறை பதிவு செய்துள்ள வழக்கில், அந்த நிலத்தை விற்கமுடியாது என கூறப்பட்டுள்ளது. இந்த நில ஒப்பந்தங்களில் சாட்சிகள் யார்? ஒருவர் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் உயர்மட்ட உறுப்பினர் - ராமர் கோவில் கமிட்டியில் அறங்காவலராவார். மற்றொருவர் அயோத்தியின் மேயர். நாட்டில் உள்ள ஒவ்வொரு வீடும் ராம் மந்திர் அறக்கட்டளைக்கு ஏதாவது நன்கொடை அளித்துள்ளனர். வீடு வீடாகச் சென்று பிரச்சாரமும் நடத்தப்பட்டது. இது பக்தியை பற்றிய விஷயம், அதை வைத்து விளையாடுகிறார்கள். தலித்துகளின் நிலங்களை வாங்க முடியாது என்ற நிலையில் அவை பறிக்கப்பட்டுள்ளன. குற்றச்சாட்டுகளை விசாரிக்க உத்தரப்பிரதேச அரசு விசாரணை ஆணையத்தை நியமித்துள்ளது. அது வெறும் கண்துடைப்பு. உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து இந்த குற்றச்சாட்டுகளை விசாரிக்க வேண்டும். இவ்வாறு பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

 

 
 

சார்ந்த செய்திகள்