மணிப்பூர் மாநிலத்தில் முதல்வர் பைரன் சிங் தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், மாநிலத்தின் பெரும்பான்மை சமூகமான மைத்தேயி சமூகத்தினர், தங்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து சலுகைகள் வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதற்குப் பழங்குடியின மக்களான குக்கி மற்றும் நாகா மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து கடந்த மே மாதம் 3ம் தேதி ஒருங்கிணைந்த பழங்குடியின மாணவர் அமைப்பு அந்த மாநிலத்தில் பேரணி நடத்தினர். இந்தப் பேரணியில் வன்முறை வெடித்தது.
இந்த வன்முறையைத் தொடர்ந்து பல நூறு பேர் கொல்லப்பட்டு, பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, வீடுகள் சூறையாடப்பட்டு, பல மக்கள் வீடுகளற்ற அகதிகளாக மாறினர். பல மாதங்களாக மணிப்பூர் மாநிலத்தில் இணைய சேவை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது ஓரளவுக்கு அங்கு நிலைமை கட்டுக்குள் இருந்தாலும், இன்னும் சில இடங்களில் துப்பாக்கிச் சூடு சம்பவங்களும் தொடர்ந்தபடியே தான் இருக்கின்றன. மணிப்பூரில் கடந்த 7 மாதங்களுக்கு மேலாக இரு சமூகத்தினரிடையே வன்முறை நிலவி வந்ததையடுத்து, அங்குள்ள சில மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறக்கப்பட்டிருந்தது. இந்த கலவரம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதால், சில மாவட்டங்களில் மட்டும் அங்கு விதிக்கப்பட்ட ஊரடங்கு தளர்த்தப்பட்டிருந்தது.
ஆனாலும், இன்னும் சில இடங்களில் அசம்பாவிதங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. இதில் பொதுமக்கள் பரிதாபமாக பலியாகிக் கொண்டே இருக்கின்றனர். அந்த வகையில், மணிப்பூரின் தெளபால் மாவட்டத்தில் மர்ம நபர்கள் சிலர், புத்தாண்டு தினமான நேற்று முன் தினம் (01-01-24) துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இந்தத் தாக்குதலில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், ஐந்து பேர் படுகாயம் அடைந்துள்ளனர். திடீர் துப்பாக்கிச்சூட்டை தொடர்ந்து அந்த மாவட்டத்தில் ஊரடங்கு அமல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தெளபால் மட்டுமின்றி இம்பால் கிழக்கு, இம்பால் மேற்கு, காக்சிங் மற்றும் பிஷ்னுபூர் மாவட்டங்களிலும் ஊரடங்கு உத்தரவு மீண்டும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. நேற்று முன் தினம் நடைபெற்ற இந்த வன்முறை சம்பவத்திற்கு அம்மாநில முதல்வர் பைரங் சிங் கடும் கண்டனம் தெரிவித்தார். அதில், தாக்குதல் நடத்தியவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு, சட்டப்படி தண்டிக்கப்படுவர் எனத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி மணிப்பூர் வன்முறை குறித்து தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் கூறியதாவது, “மணிப்பூர் மாநிலத்தில் நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். பல மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. மணிப்பூர் மக்கள் கடந்த 8 மாதங்களாக வன்முறை, கொலை மற்றும் அழிவை பார்த்து வருகின்றனர்.
எப்போதுதான் இந்த வன்முறை ஓயும். மணிப்பூரில் உள்ள அனைத்து கட்சி தலைவர்கள் டெல்லிக்கு வந்து பிரதமரை சந்தித்து பேசுவதற்கு நேரம் கோரினர். ஆனால் இன்று வரையிலும் பிரதமர் அவர்களை சந்திப்பதற்கு முன்வரவில்லை. பிரதமர் நரேந்திர மோடி மணிப்பூர் மாநிலத்திற்கு செல்லவும் இல்லை, மணிப்பூரை பற்றி பேசவும் இல்லை. இந்த விவகாரம் குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை இப்படிப்பட்ட தலைமையா மணிப்பூருக்கு தேவை?. அரசு இனியும் தாமதிக்காமல் இந்த விவகாரத்தை உறுதியான நடவடிக்கை எடுத்து வன்முறையை தடுத்து நிறுத்த வேண்டும். மேலும் அங்குள்ள மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களுக்கு நம்பிக்கை அளித்து அமைதியை கொண்டு வர முயற்சிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.