கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர் என்பவர் அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட பலரை ஏமாற்றி பண மோசடி செய்துள்ளார். அதில் ஒன்றாகத் தொழிலதிபரை மிரட்டி 200 கோடி ரூபாய் மோசடி செய்துள்ள வழக்கில் கடந்த 2019-ஆம் ஆண்டு அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக சுகேஷ் சந்திரசேகர் அவரது மனைவி லீனா மரியா பால் உள்ளிட்ட 6 பேர் மீது அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்திருந்தது.
இரட்டை இலைச் சின்னம் லஞ்சம் தொடர்பாகவும் 200 கோடி ரூபாய் மோசடி தொடர்பாகவும் கைது செய்யப்பட்ட சுகேஷ் என்பவர் டெல்லி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சுகேஷ் சந்திரசேகர் சிறையிலிருந்தவாறே டெல்லி துணைநிலை ஆளுநருக்கு எழுதிய கடிதம் டெல்லி அரசியலைப் பரபரப்பாக்கியது.
ஆம் ஆத்மி கட்சியில் போட்டியிட எனக்கு வாய்ப்பு அளிப்பதாகக் கூறியதால் 50 கோடி ரூபாய் வழங்கியதாகவும் டெல்லி முன்னாள் அமைச்சர் சத்யேந்திர ஜெயின் சிறையில் தன்னை பலமுறை சந்தித்துள்ளதாகவும் சுகேஷ் குறிப்பிட்டுள்ளார். சிறையில் பாதுகாப்பு வேண்டுமானால் மாதம் 2 கோடி அனுப்ப வேண்டும் என சத்யேந்திர ஜெயின் கூறியதாகவும் சுகேஷ் அக்கடிதத்தில் கூறியிருந்தார். கடிதத்தை முன் வைத்து அமலாக்கத்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
ஆம் ஆத்மி கட்சியும் டெல்லி அரசும் ஊழலில் ஈடுபட்டதை அம்பலப்படுத்த ஆதாரங்களை வைத்திருக்கிறேன் என்றும் சுகேஷ் சந்திரசேகர் அக்கடிதத்தில் கூறியிருந்தார். சுகேஷ் குற்றச்சாட்டினை முன்வைத்து ஆம் ஆத்மி அரசுக்கு பாஜக கடும் கண்டனத்தைத் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், “மோசடியில் சிக்கி சிறையில் உள்ள சுகேஷ் சந்திரசேகரை பாஜகவின் தேசியத் தலைவராக ஆக்கிவிடலாம். பாஜகவின் மொழியை சுகேஷ் சந்திரசேகர் கற்று வருகிறார். பாஜகவில் சேரவும் பயிற்சி பெற்று வருகிறார். அவர் எந்த நாளிலும் பாஜகவில் சேரலாம். சுகேஷ் சந்திரசேகரை நட்சத்திர பேச்சாளராக ஆக்க வேண்டும். அவரது கதைகளைக் கேட்கவாவது மக்கள் பாஜக கூட்டங்களுக்கு வருவார்கள். மோடி பங்கேற்கும் கூட்டங்களில் மக்கள் கூடுவது இல்லை என கேள்விப்பட்டேன்” எனக் கூறினார்.
மனிஷ் சிசோடியா மீது சுமத்தப்பட்டுள்ள வழக்கு குறித்துக் கூறிய கெஜ்ரிவால், “பிரதமரின் அலுவலகம் திரைப்படங்களைத் தயாரிக்கிறது. இதற்கு சிபிஐ கதை எழுதுகிறது. பாலிவுட்டை விடச் சிறந்த கதைகளை சிபிஐ எழுதுகிறது” என்றார்.