மத்திய தொல்லியல்துறை பட்டயப்படிப்பில் செம்மொழியான தமிழைச் சேர்த்து அறிவிப்பை வெளியிட்டது மத்திய அரசு.
செம்மொழி வரிசையில் தமிழ் புறக்கணிக்கப்பட்டதற்கு தமிழகத்தில் அரசியல் கட்சித்தலைவர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் நரேந்திரமோடிக்கு நேற்று கடிதம் எழுதியிருந்தார்.
அதேபோல், மத்திய தொல்லியல்துறை பட்டயப்படிப்பில் செம்மொழியான தமிழையும் சேர்த்து புதிய அறிவிப்பாணையை வெளியிட மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முறையிடப்பட்டது.
இந்த நிலையில், தொல்லியல் பட்டயப்படிப்புக்கான தகுதிப்பட்டியலில் செம்மொழியான தமிழ் மொழியும் சேர்த்து புதிய அறிவிப்பை வெளியிட்டது மத்திய அரசின் தொல்லியல் துறை. மேலும் இந்த புதிய அறிவிப்பாணையில், கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஒடியா. பாலி, அரபிக், சமஸ்கிருதம், பாரசீகம், பராகிரித் உள்ளிட்ட மொழிகளும் சேர்க்கப்பட்டுள்ளன.