கரோனாவால் பல்வேறு துறைகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் தகவல் தொழில்நுட்பத் துறையில் புதிதாக 4.5 லட்சம் பேர் பணிக்கு சேர்க்கப்பட்டுள்ளதாக நாஸ்காம் தெரிவித்துள்ளது.
நடப்பு நிதியாண்டின் இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத்துறை சுமார் ரூபாய் 17 லட்சம் கோடி வருவாயை ஈட்டியுள்ளதாக தகவல் தொழில் நுட்பத் துறையின் சங்கமான நாஸ்காம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, நாஸ்காம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஒட்டு மொத்த தகவல் தொழில் நுட்ப வளர்ச்சி 2011 ஆம் ஆண்டுக்கு பிறகு 15.5% வளர்ச்சிக் கண்டுள்ளது.
வரும் 2026- ஆம் ஆண்டில் தகவல் தொழில் நுட்பத்துறை சுமார் 26 லட்சம் கோடி ரூபாய் வருவாயை ஈட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் தகவல் தொழில்நுட்பத்துறையில் துணை துறைகளும் இரண்டு இலக்க வளர்ச்சியை எட்டியுள்ளன. இத்துறையின் ஏற்றுமதி 17.2% வளர்ச்சிக் கண்டு ரூபாய் 13 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.
இது இந்தியாவின் ஒட்டுமொத்த சேவைகள் ஏற்றுமதியில் 51% என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் தகவல் தொழில் நுட்பத்துறைக்கு திருப்பு முனையாக அமைந்துள்ளது. அதிக வேலை வாய்ப்புகள் வழங்கியதோடு, பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வழங்கியுள்ளது.
நடப்பு நிதியாண்டில் மேலும் 4.5 லட்சம் பேர் புதிதாக பணிக்கு சேர்க்கப்பட்டுள்ளனர். தகவல் தொழில்நுட்பத்துறையில் நேரடியாக பணிபுரியும் பணியாளர்களின் எண்ணிக்கை 50 லட்சமாக உயர்ந்துள்ளது. இதில் 36% பேர், அதாவது 18 லட்சம் பேர் பெண்கள்” என்று நாஸ்காம் தெரிவித்துள்ளது.