Skip to main content

மன்மோகன் சிங் அமைச்சரவை போல் பிரதமர் நரேந்திர மோடி அமைச்சரவை...!

Published on 08/07/2021 | Edited on 08/07/2021

 

 

prime minister narendra modi cabinet ministers


பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் விரிவாக்கம் செய்யப்பட்ட புதிய அமைச்சரவைப் பதவியேற்றுக் கொண்டது. இதில் ஹர்தீப்சிங் புரி, கிஷன் ரெட்டி, அனுராக் தாக்கூர் உள்ளிட்ட 15 பேர் கேபினட் அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர். அதேபோல், தமிழகத்தைச் சேர்ந்த எல்.முருகன் உள்ளிட்ட 28 பேர் மத்திய இணையமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர். புதிய அமைச்சர்களுக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

 

அதைத் தொடர்ந்து, மத்திய அமைச்சர்களுக்கான துறைகளை ஒதுக்கீடு செய்து குடியரசுத்தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

 

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சியில் இருந்த அமைச்சரவைகளின் எண்ணிக்கை போன்றே பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரவையும் உள்ளது. இது குறித்து விரிவாக பார்ப்போம்!

pm

1996- ஆம் ஆண்டு பிரதமராக வாஜ்பாய் 13 நாட்கள் மட்டுமே ஆட்சி செய்த போது, அவரையும் சேர்த்து அமைச்சரவையில் மொத்தம் 12 பேர் இடம் பெற்றிருந்தனர். பின்னர், 1998- ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக வாஜ்பாய் பிரதமராக பதவியேற்றபோது, அவரையும் சேர்த்து 21 அமைச்சர்கள், 4 தனி அதிகாரம் கொண்ட அமைச்சர்கள், 16 இணையமைச்சர்கள் என மொத்தம் 41 பேர் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தனர். 

 

அதைத் தொடர்ந்து, 2004- ஆம் ஆண்டு முதல்முறையாக மன்மோகன் சிங் பிரதமராகப் பதவியேற்றபோது, பிரதமர் அல்லாமல் 29 அமைச்சர்கள், 8 தனி அதிகாரம் கொண்ட அமைச்சர்கள், 40 இணையமைச்சர் என மொத்தம் 77 பேர் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தனர்.

 

2009- ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக மன்மோகன் சிங் பிரதமராகப் பதவியேற்றபோது, பிரதமர் நீங்கலாக 32 அமைச்சர்கள், 12 தனி அதிகாரம் கொண்ட அமைச்சர்கள், 32 இணையமைச்சர்கள் என மொத்தம் 76 பேர் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தனர்.

 

அதன்படி, தற்போதைய (2021 ஆம் ஆண்டு) மத்திய அமைச்சரவையிலும் பிரதமர் அல்லாமல், 30 அமைச்சர்கள், 2 தனி அதிகாரம் கொண்ட அமைச்சர்கள், 45 இணையமைச்சர்கள் என மொத்தம் 77 பேர் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளனர். 

 

கடைசியாக பிரதமர் நரேந்திர மோடி அமைச்சரவையில் 53 பேர் இடம் பெற்றிருந்த நிலையில், அந்த எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்