"கரோனாவை ஒழிக்க தினமும் ஐந்து முறை அனுமன் சாலீஸாவை கூறுங்கள்" என பாஜக எம்.பி பிரக்யா தாகூர் தெரிவித்துள்ளது கிண்டலுக்கு உள்ளாகியுள்ளது.
உலகம் முழுவதையும் முடக்கிப்போட்டுள்ள கரோனா வைரஸின் பரவல் இந்தியாவில் நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் இருந்து வருகின்றது. அந்த வகையில் இன்றைய நிலவரப்படி, இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 14,35,453ஆக உயர்ந்துள்ளது. கரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 9,17,567 ஆக உள்ளது. கரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 32,771 ஆக இருக்கிறது. இந்த நோய்க்கான மருந்து இதுவரை கண்டறியப்படாத சூழலில், உலகம் முழுவதும் இதற்காக நூற்றுக்கணக்கான ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், கரோனாவை ஒழிக்க தினமும் ஐந்து முறை அனுமன் சாலீஸாவை கூறுங்கள் என பாஜக எம்.பி. பிரக்யா தாகூர் தெரிவித்துள்ளது கிண்டலுக்கு உள்ளாகியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம், போபால் தொகுதி பாஜக எம்.பி., பிரக்யா சிங் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், "கரோனா வைரஸ் பிரச்சனைக்கு முடிவுக்கு கொண்டுவரவும், மக்கள் நலமாக இருக்கவும் நாம் அனைவரும் இணைந்து பக்தி பாதையில் முயற்சி செய்வோம். ஆகஸ்ட் 5-ம் தேதி வரை தினசரி ஐந்து வேளை அனுமனை நினைத்து அனுமன் சாலீஸா மந்திரத்தை சொல்வோம். ஆகஸ்ட் 5-ம் தேதி இந்த பாராயணத்தை முடித்துக்கொண்டு வீட்டிலேயே ராமருக்கு தீபாராதனை செய்வோம். அனுமன் சாலீஸா மந்திரத்தை நாடு முழுவதும் ஒரே குரலாக ஒலித்தால் அதன்மூலம் கரோனாவை ஒழித்து விடலாம். ராமரிடம் இந்த பிரார்த்தனையை வைப்போம்" எனத் தெரிவித்துள்ளார். அவரது இந்த யோசனை சமூகவலைதளங்களில் பல்வேறு விமர்சனங்களை சந்தித்து வருகிறது.