ஜம்மு-காஷ்மீர் கத்துவாவில் 8 வயது சிறுமி வன்கொடுமை செய்யப்பட்டு கொலைசெய்யப்பட்ட வழக்கில் இன்று இறுதி விசாரணை நடக்கவிருக்கிறது.
ஜனவரி 17 ஆம் தேதி ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கத்துவாவில் ஆசிபா பானு என்ற 8 வயது சிறுமி 8 நபர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கொலை செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான கொடுமைகளுக்கு தீர்வு மற்றும் கடும் தண்டனைகள் வேண்டும் என போராட்டங்கள் நடந்துவருகின்றன.
இந்த சிறுமி வழக்கில் இன்று இறுதி விசாரணைக்காக குற்றம்சாட்டப்பட்ட எட்டு நபர்களும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். மேலும் அவர்கள் மீது ஏற்கனவே குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து ஆசிபா பானுவின் தந்தை எங்கள் குடும்பத்திற்கு பாதுகாப்பு வேண்டுமெனவும், இந்த வழக்கில் உரிய நீதி வேண்டுமெனில் இந்த வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த கோரிக்கை மனுவின் மீதான விசாரணை இன்று மதியம் 2.30க்கு நடைபெறும் என நீதிமன்றம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த வழக்கில் சிறுமிக்காக போராடும் வழக்கறிஞர் தீபிகா தமக்கும் இந்த வழக்கினால் உயிர் அச்சுறுத்தல் இருப்பதாகவும், இருந்தாலும் தான் இந்த வழக்கில் பின்வாங்க போவதில்லை எனவும் கூறியுள்ளார்.