மணிப்பூர் மக்களை பிரதமர் கைவிட்டுவிட்டார் என ராகுல்காந்தி எம்.பி. ஆவேசமாக பேசியுள்ளார்.
மோடி அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் சார்பில் காங்கிரஸ் கட்சி நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தைக் கொண்டு வந்தது. இந்த தீர்மானத்தின் மீதான விவாதம் இரண்டாவது நாளாக இன்றும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மக்களவையில் காங்கிரஸ் சார்பில் நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசுகையில், “அதானி குறித்த தனது பேச்சு பா.ஜ.க.வினருக்கு எரிச்சலை ஏற்படுத்திவிட்டது. அதானி குறித்து நான் பேச மாட்டேன். எனவே பாஜகவினர் அச்சப்பட வேண்டாம். நான் இன்று யாரையும் அதிகம் தாக்கி பேசப்போவதில்லை. நீங்கள் நிம்மதியாக இருக்கலாம். மணிப்பூர் பற்றியே பேசுவேன். அதானி குறித்து பேசமாட்டேன். பா.ஜ.க.வினர் பயப்பட வேண்டாம்.
பிரதமர் நரேந்திர மோடி மணிப்பூரை இரண்டாக உடைத்துவிட்டார். கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூருக்கு நான் நேரில் சென்றேன். ஆனால், பிரதமர் மோடி இன்றுவரை செல்லவில்லை; மணிப்பூரை இந்திய நாட்டின் ஒரு பகுதியாக பிரதமர் கருதவில்லை. மணிப்பூருக்கு பிரதமர் மோடி ஏன் செல்லவில்லை?. மணிப்பூர் மக்களை பிரதமர் கைவிட்டு விட்டார். மத்திய அரசு தனது செயல்களால் மணிப்பூரை பிளவுபடுத்திவிட்டது. இந்தியாவை கொலை செய்துவிட்டீர்கள்.
மணிப்பூர் வன்முறையால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், பெண்கள் என பல தரப்பினரும் என்னிடம் குமுறினார்கள். பா.ஜ.க. அரசு இந்தியா என்ற கருத்தோட்டத்தையும், பாரம்பரியத்தையும் அழித்துவிட்டது. பாரத மாதாவை பாதுகாப்பதற்கு பதிலாக, பாரத மாதாவை பா.ஜ.க. கொன்றுவிட்டது. பா.ஜ.க.வினர் தேச துரோகிகள். நீங்கள் பாதுகாவலர்கள் அல்ல. கொலைகாரர்கள். மணிப்பூரில் ராணுவத்தை பயன்படுத்தினால் ஒரே நாளில் அமைதியை கொண்டு வரலாம். ராவணன் கூட மக்கள் பேச்சை கேட்டார். ஆனால் நீங்கள் கேட்கவில்லை.
நான் 130 நாட்கள் ’இந்திய ஒற்றுமை’ நடைபயணத்தை மேற்கொண்டேன். யாத்திரை சென்றபோது என்ன லட்சியத்திற்காக செல்கிறீர்கள் என மக்கள் என்னிடம் கேட்டார்கள். இந்திய மக்களை நெருங்கி அணுகுவதற்கு ஒற்றுமை பயணத்தை மேற்கொண்டுள்ளேன். குமரி முதல் இமயம் வரையிலான தனது இந்திய ஒற்றுமை பயணம் இன்னும் முடியவில்லை. நான் பேசத் தொடங்கியதும் சிலர் வெறுப்புடன் கோஷமிட்டனர். வெறுப்பை நீக்க வேண்டும் என முடிவெடுத்து மனதில் அன்பை நிறைத்து வைத்துள்ளேன்.
பா.ஜ.க. ஆட்சியால் நான் துன்புறுத்தப்பட்டு வருகிறேன். இந்திய ஒற்றுமை பயணத்தின் போது ஏராளமான பாடங்களை கற்றுக்கொண்டேன். பிரதமர் மோடி விரும்பினால் நான் சிறைக்கு செல்ல தயார். இந்திய ஒற்றுமை பயணத்துக்காக எதையும் தியாகம் செய்ய தயார். ஒற்றுமை பயணத்தின் போது மக்கள் எனக்கு ஏராளமான உதவிகளை செய்தனர். நடைபயணத்தின் போது இந்தியாவில் விவசாயிகளின் நிலை மோசமாக இருப்பதை உணர்ந்தேன். விவசாயிகளின் வலியை பிரதிபலிக்க என்னிடம் வார்த்தைகள் இல்லை. இந்திய ஒற்றுமை பயணம் என்னை மாற்றியது” என பேசினார்.