மணிப்பூரில் ஏற்பட்ட கலவரத்தைத் தொடர்ந்து அங்கு அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
மணிப்பூர் மாநிலத்தில் பாஜக தலைமையிலான அரசு ஆட்சி செய்து வருகிறது. இந்த மாநிலத்தின் முதல்வராக பிரேன் சிங் இருந்து வருகிறார். இந்நிலையில், மணிப்பூர் மாநிலத்தில் மெய்டீஸ் எனும் பழங்குடி அல்லாத சமூகத்தினர் தங்களைப் பட்டியலின பழங்குடியினர் சமூகத்தில் இணைத்து அதற்கான அந்தஸ்து வழங்க வேண்டும் என மாநில அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இதற்கு மற்ற பழங்குடியின சமூகத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதற்காகப் பழங்குடியினர் மாணவர் அமைப்பு நடத்திய பேரணியில் கலவரம் ஏற்பட்டு மணிப்பூரில் பல்வேறு இடங்களில் வீடுகளுக்குத் தீ வைக்கப்பட்டது. மேலும் இந்த கலவரத்தில் 70 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் பலத்த காயமடைந்தனர். கலவரக்காரர்களை கண்டதும் சுட உத்தரவும் பிறபிக்கப்பட்ட்து. பாதுகாப்பு நடவடிக்கைக்காக 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்ட நிலையில் மணிப்பூர் மாநிலத்திற்கு இயக்கப்படும் அனைத்து ரயில்களும், சாலை போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து கலவரம் நடைபெற்ற இடத்தை ராணுவம் மற்றும் துணை ராணுவத்தின் 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட வீரர்கள் குவிக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இருப்பினும் இன்னும் இயல்பு வாழ்க்கை திரும்பவில்லை.
இந்த நிலையில் கலவரத்தை தொடர்ந்து கடந்த 3 வாரங்களாக மணிப்பூரில் அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ. 170க்கு விற்கப்பட்டு வருகிறது. ஒரு சமையல் சிலிண்டரின் விலை கள்ளச்சந்தையில் ரூ. 1800க்கு விற்கப்பட்டு வருகிறது. ரூ. 900க்கு விற்ற ஒரு மூட்டை அரிசி தற்போது ரூ. 1800க்கு விற்கப்பட்டு வருகிறது. இதேபோன்று பால், முட்டை என அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலையும் இரண்டு அல்லது மூன்று மடங்கு உயர்ந்துள்ளது.
மணிப்பூரில் இயல்பு வாழ்க்கை இன்னும் திரும்பாததால் பொதுப் போக்குவரத்திற்கு சரிவர அனுமதி அளிக்கப்படவில்லை. அதனால் வெளியூரில் இருந்து வரும் சிலிண்டர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கு மணிப்பூரில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும், மீண்டும் கலவரம் ஏற்படும் என்ற பயத்தால் காய்கறிகள் கொண்டு வரும் லாரிகள் கூட மணிப்பூருக்கு வருவதில்லை என்று கூறப்படுகிறது. அதனால் ஏற்கனவே கடைகளில் கையிருப்பு உள்ள அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது.