சர்வதேச ஆசிரியர் விருதை வென்ற இந்திய ஆசிரியர் ரஞ்சித் சிங் திசாலே, தனக்கு கிடைத்த 7.4 கோடி ரூபாய் பரிசுத்தொகையை தன்னுடன் இந்த விருதுக்கான போட்டியில் இருந்த சக ஆசிரியர்களுடன் பகிர்ந்துகொண்டுள்ளார்.
லண்டனை தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் 'வர்க்கி பவுண்டேஷன்' என்ற அறக்கட்டளை கடந்த 2015 முதல் ஆண்டுதோறும் சர்வதேச ஆசிரியர் விருது வழங்கி சிறப்பாகக் கல்வி சேவையாற்றும் ஆசிரியர்களை கௌரவித்து வருகிறது. அந்தவகையில், இந்த ஆண்டிற்கான சிறந்த ஆசிரியர் விருதுக்கு சுமார் 140-க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டன. பல்வேறு கட்ட ஆய்வுகளுக்குப் பிறகு இதிலிருந்து 50 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களில், இத்தாலி, பிரேசில், வியட்நாம், பிரிட்டன், தென் கொரியா, அமெரிக்கா, தென்னாப்பிரிக்கா, நைஜீரியா, இந்தியா, மலேசியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 10 பேர் இறுதியாகத் தேர்வு செய்யப்பட்டனர். இதில் இந்திய ஆசிரியர் ரஞ்சித் சிங் திசாலே சிறந்த சர்வதேச ஆசிரியர் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டார்.
கன்னட மொழி பேசும் மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் மகாராஷ்ட்ராவின் சோலாபூர் மாவட்டம், பரத்வாடே பகுதியில் செயல்படும் அரசு தொடக்கப் பள்ளியில் ரஞ்சித் சிங் திசாலே ஆசிரியராகப் பணியாற்றுகிறார். அப்பகுதியில் உள்ள மக்களுக்காகக் கன்னட மொழியை கற்று, அங்குள்ள மக்களிடையே பெண் கல்வி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, பெண் குழந்தைகளை யாரும் படிக்க அனுப்புவது கிடையாது என்ற அவல நிலையை மாற்றியவர் ரஞ்சித் சிங் திசாலே. அதுமட்டுமின்றி, தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மாணவர்களின் கற்றலை எளிமையாக்கினார் இவர். இவரின் இந்த சேவையைப் பாராட்டும் விதமாகச் சிறந்த ஆசிரியராக இவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் இந்த விருது வென்றது குறித்து பேசியுள்ள ரஞ்சித் சிங் திசாலே, "ஆசிரியர்களால் சமூகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும். எனக்குக் கிடைத்த பரிசுத் தொகையில் 50 சதவீத தொகையை இறுதிப் போட்டிக்குத் தேர்வு செய்யப்பட்ட இதர 9 ஆசிரியர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.