
உத்தரப்பிரதேசம் மாநிலம் கோரக்பூரில் உள்ள பாபா ராகவ் தாஸ் மருத்துவமனையில், கடந்த வருடம் ஆகஸ்ட் 7ஆம் தேதிமுதல் அடுத்த ஒரு வாரத்திற்குள் கிட்டத்தட்ட 100 பச்சிளம் குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தன. அவர்கள் அனைவருமே அந்த மருத்துவமனையில் உள்ள மூளைவீக்க நோயாளிகளுக்கான பிரிவில் சிகிச்சை பெற்று வந்தவர்கள் என்பதுதான் துயரம்.
நீண்ட நாட்களாக ஆக்ஸிஜன் சிலிண்டர்களுக்கான தொகையை நிலுவையில் வைத்திருந்ததால், புஷ்பா சேல்ஸ் எனும் நிறுவனம் ஆக்ஸிஜன் சிலிண்டர் விநியோகத்தை நிறுத்தியதுதான் அந்த மாபெரும் துயரத்துக்குக் காரணம் என்று சொல்லப்பட்டது. அந்த சமயத்தில் தனது பணிநேரம் இல்லை என்றாலும், இரவு முழுவதும் அலைந்துதிரிந்து கிடைத்த சிலிண்டர்களை வாங்கிவந்து, முடிந்தமட்டும் குழந்தைகளைக் காப்பாற்ற முயற்சித்தார் மருத்துவர் கஃபீல்கான்.

இந்தத் துயரச் சம்பவத்தில் எப்படியேனும் குழந்தைகளைக் காப்பாற்றிவிடலாம் என நம்பி முயற்சித்த கஃபீல்கான் பற்றிய செய்திகள் ஊடகங்களில் விரைவாக பரவின. இதையறிந்த மாநில அரசு அவரைப் பாராட்டாமல், மருத்துவமனை ஊழியர்கள் மத்தியில் வைத்தே மிரட்டல் விடுத்தது. ‘சிலிண்டர்களை வெளியில் இருந்து வாங்கிவந்தால் நீ ஹீரோ ஆகிவிடுவாயா? எப்படி ஹீரோ ஆகிறாய் என்று நான் பார்க்கிறேன்’ என உ.பி. முதல்வர் யோகி சொன்னபோதே ஆடிப்போயிருந்தார் கஃபீல்கான். அந்த மாதமே அவர்மீது பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு சிறையிலும் அடைக்கப்பட்டார்.
அவரது கைதுகுறித்து கோரக்பூர் மருத்துவமனையில் பணிபுரியும் மூத்த மருத்துவர் ஒருவர், ‘மனசாட்சிக்கு உட்படும் ஒரு மருத்துவர் என்ன செய்வாரோ.. அதையே கஃபீல்கான் செய்தார். ஆனால், அவர் செய்யாத தவறுக்கு சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார்’ என வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

தற்போது கஃபீல்கான் சிறையில்தான் இருக்கிறார். கடந்த ஆறு மாதங்களாக சிறைத்தண்டனை அனுபவித்து வரும் அவருக்கு, பலமுறை கோரியும் பிணை மறுக்கப்பட்டுள்ளது. மாநில அரசின் நேரடித் தலையீடே கஃபீல்கானின் இந்த நிலைக்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது. அவரை நேரில் சந்திக்க எத்தனையோ பேர் முயற்சிசெய்தும், ‘உயர் ரத்த அழுத்தம் மற்றும் உடல்நலக்குறைவு’ உள்ளிட்ட காரணங்களைச் சொல்லி அவர் மற்றவர்களைச் சந்திக்க மறுக்கிறார் என்ற தகவல்களே இப்போதைக்கு நமக்குக் கிடைத்துள்ளன.