நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று (31/01/2022) காலை 11.00 மணிக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் தொடங்குகிறது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றுகிறார்.
அதைத் தொடர்ந்து, நாளை (01/02/2022) காலை 11.00 மணிக்கு நாடாளுமன்றத்தில் 2022-2023 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார். இந்த முறை காகித பயன்பாட்டைக் குறைக்கும் வகையில் டிஜிட்டல் முறையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. பட்ஜெட் நிகழ்வுகளை நேரலையில் காணும் வகையில் பிரத்யேக இணையதளம் மற்றும் ஆண்ட்ராய்டு மொபைல் செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளதால், பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள், சலுகைத் திட்டங்கள், மாநிலத்தின் அடிப்படை கட்டமைப்புகள் உள்ளிட்டவை இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிப்ரவர் 2-ஆம் தேதி முதல் குடியரசுத்தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம் நடைபெறுகிறது. இதனிடையே, பெகாசஸ், விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்சனைகளை எழுப்ப காங்கிரஸ், தி.மு.க., கம்யூனிஸ்ட் கட்சிகள், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், தேசிய வாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
கரோனா சூழல் காரணமாக, மாநிலங்களவை காலை 10.00 மணி முதல் பிற்பகல் 03.00 மணி வரையும், மக்களவை மாலை 04.00 மணி முதல் இரவு 09.00 மணி வரையிலும் செயல்பட உள்ளது.