
குஜராத் மாநிலத்தில் சுகாதாரத்துறை அமைச்சராக இருப்பவர் குமார் கனானி. இவரது மகன் பிரகாஷ் கனானி. இவர் கடந்த வாரம் புதன்கிழமை இரவு ஊரடங்கு விதிகளை மீறி சாலையில் சுற்றித் திரிந்துள்ளார். அவரை மடக்கிய அப்பகுதி பெண் காவலர் சுனிதா யாதவ் அவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளார். அப்போது அவரின் கேள்விகளுக்கு அமைச்சரின் மகன் திமிராக பதிலளித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் காவலர் அவரைக் கடுமையாக எச்சரித்துள்ளார்.
இந்த இரவு நேரத்தில் சாலையில் சுற்ற உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது என்று கேள்வி எழுப்பியுள்ளார். ஆனால் அமைச்சரின் மகன் அவரை எதிர்த்துப் பேசுவதிலேயே குறியாக இருந்துள்ளார். ஒரு கட்டத்தில் அவரின் அப்பாவும் அமைச்சருமான குமார் கனானிக்கு அவர் ஃபோன் போட்டு பெண் காவலரிடம் கொடுத்துள்ளார். அவரும் அமைச்சரிடம் பேசியுள்ளார். உங்கள் மகன் இரவு நேரத்தில் சுற்றியது மட்டும் இல்லாமல் தேவையில்லாமல் காவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுவதாகவும் கூறினார். இந்நிலையில் தற்போது அவருக்கு பணியிடத்தில் அழுத்தம் கொடுக்கப்படுவதாகக் கூறப்படுகின்றது. இதனால் அவர் வேலையை ராஜினாமா செய்ய உள்ளதாகத் தெரிவித்துள்ளார். தான் தற்போது ராஜினாமா செய்தாலும் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி ஐ.பி.எஸ். அதிகாரியாக வேலையில் சேர்வதை யாரும் தடுக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.