தேர்தல் வியூக கணிப்பாளர்களில் முதன்மையாக கருதப்படுபவர் பிரஷாந்த் கிஷோர். பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இவர், இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு வியூகங்களை வகுத்து கொடுக்கும் பணியை மேற்கொண்டு வந்தார். அந்த வகையில், பா.ஜ.க, திரிணாமுல் காங்கிரஸ், தி.மு.க உள்ளிட்ட கட்சிகளுக்கு வியூகங்களை வகுத்து கொடுத்து அந்த கட்சிகளை வெற்றி பெறவும் செய்திருக்கிறார்.
தேர்தல் வியூகங்கள் பணியை கைவிட்ட இவர், அரசியல் தொடர்பான கருத்துக்களை அவ்வப்போது தெரிவித்து வந்தார். பீகார் மாநில அரசியலில் அதிக ஆர்வம் காட்டிய பிரஷாந்த் கிஷோர், ‘ஜன் சுராஜ்’ எனும் இயக்கத்தை தொடங்கி மாநிலம் முழுவதும் சுமார் 3,000 கி.மீ பாதயாத்திரை மேற்கொண்டு மக்களை சந்தித்து ஆதரவை பெற்று வந்தார். 2 ஆண்டுகளாக தொடர்ந்து பாதயாத்திரை மேற்கொண்டு வந்த பிரஷாந்த், தனது இயக்கத்தை அரசியல் கட்சியாக அறிவித்தார். ‘ஜன் சுராஜ்’ எனும் கட்சியை அதிகாரப்பூர்வமாக தொடங்கிய பிரஷாந்த் கிஷோர், தேர்தல் அரசியலிலும் போட்டியிடப்போவதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.
இந்த சூழ்நிலையில், பீகார் மாநிலத்தில் காலியானதாக அறிவிக்கப்பட்ட ராம்கார், தராரி, பெலகஞ்ச் மற்றும் இமாம்கஞ்ச் ஆகிய 4 தொகுதிகளுக்கு கடந்த 13ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை இன்று (23-11-24) நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான பா.ஜ.க கூட்டணி, காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி, பிரஷாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டன. புதிதாக கட்சி ஆரம்பித்த பிரஷாந்த் கிஷோர் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நான்கு தொகுதிகளிலும் படுதோல்வி அடைந்துள்ளார்.
அதன்படி, தராரி தொகுதியில் ஜன் சுராஜ் வேட்பாளரான கிரன் சிங் 5,622 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்துள்ளார். ராம்கார் தொகுதியில் போட்டியிட்ட ஜன் சுராஜ் கட்சியின் வேட்பாளர் அஜீத் குமார் சிங் 35,825 வாக்குகள் பெற்று பா.ஜ.க வேட்பாளரிடம் தோல்வி அடைந்துள்ளார். இமாம்கஞ்ச் தொகுதியில் ஜன் சுராஜ் வேட்பாளர் ஜிதேந்திர பஸ்வான் 37,103 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்துள்ளார். பெலகஞ்ச் தொகுதியில் ஜன் சுராஜ் வேட்பாளர் முகமது அமஜத் 17,285 வாக்குகள் பெற்று ஜனதா தளம் வேட்பாளரிடம் தோல்வி பெற்றிருக்கிறார்.