
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனை எதிர்கொள்ளும் வகையில் அரசியல் கட்சிகள் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக திமுகவில் ஒருங்கிணைப்புக்குழு அமைக்கப்பட்டு அதற்கான பணிகள் இந்த குழு மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத்தகைய சூழலில் தான் சட்டமன்றத் தேர்தலையொட்டி, கட்சி பணிகள் மேற்கொள்ள மாவட்ட பொறுப்பாளர்களை அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி நியமித்திருந்தார்.
இந்நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வபெருந்தகையை மாற்றக்கோரி மாவட்ட தலைவர்கள் புகார் மனு கொடுத்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாகத் தமிழக காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் கிரீஸ் ஜோடாங்கரை டெல்லியில் சந்தித்து மாவட்ட தலைவர்கள் நேற்று (19.02.2025) இரவு புகார் மனு கொடுத்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாகப் புகைப்படங்களும் வெளியாகியுள்ளன. இந்த சந்திப்பின் போது பெரம்பலூர், அரியலூர், நாமக்கல், கடலூர், விருத்தாசலம் உள்ளிட்ட சுமார் 20க்கும் மேற்பட்ட மாவட்ட தலைவர்கள் இடம் பெற்றிருந்தனர்.
இந்த புகார் மனுவில், “செல்வபெருந்தகை மீது கட்சியில் அதிருப்தி நிலவுகிறது. மாவட்ட தலைவர்களை மாநில மாநில நிர்வாகிகள் மதிப்பதில்லை. கட்சிக்காக உழைக்கும் மாவட்ட தலைவர்களை மாற்றும் வகையில் புதிய மாவட்ட தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். எனவே தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் பொறுப்பில் இருந்து செல்வபெருந்தகையை மாற்ற வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் டெல்லியில் முகாமிட்டுள்ள காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர்கள், அக்கட்சியின் அகில இந்தியத் தலைவரான கார்கேவையும், பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபாலையும் இன்று (20.02.2025) சந்தித்து புகார் மனு அளிக்க உள்ளனர்.