முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியின் உடல் முழு ராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
இந்தியாவின் 13 -ஆவது குடியரசு தலைவராக 2012 முதல் 2017 வரை பதவி வகித்த பிரணாப் முகர்ஜி கடந்த மாதம் கரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு டெல்லி ராணுவ மருத்துவமனையில் மூளை அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது. மேலும், சுவாசம் மற்றும் சிறுநீரக பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருந்த அவர் கடந்த சில நாட்களாக ஆழ்ந்த கோமா நிலையில் இருந்துவந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று அவர் காலமானார்.
இதனைத்தொடர்ந்து டெல்லியில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்ட அவரது உடலுக்கு அரசியல்கட்சி தலைவர்கள், உறவினர்கள் என அனைவரும் அஞ்சலி செலுத்தினர். பின்னர், அவரது இல்லத்திலிருந்து லோதி சாலையில் உள்ள மயானத்திற்கு, முப்படைகளின் மரியாதையுடன் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்ட அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.