உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவரை 20 லட்சத்துக்கும் அதிகமானவர்களை இந்த நோய் தாக்கியுள்ளது. 1 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உலகம் முழுவதும் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 300-க்கும் மேற்பட்டவர்கள் இதனால் உயிரிழந்துள்ளனர். 11,000-க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க இந்தியா உட்பட உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதன் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 17 பேருக்கு கரோனா தொற்று இருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு 10 மாதக் குழந்தையும் அடக்கம். மேலும், அவர்களுடன் தொடர்பில் இருந்த 24 பேர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்குத் தற்போதைய நிலையில் கரோனா தொற்று இல்லை என்று முடிவு வந்தாலும் அவர்கள் தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். தொடர்பில் இருந்த 24 பேரும் ஹைதராபாத்திற்கு அருகில் உள்ள நிஜாமியா பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 17 பேரும் செகந்திராபாத் அருகில் உள்ள காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார்கள். அவர்கள் தங்கி இருந்த வீட்டை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். இதுவரை தெலுங்கானா மாநிலத்தில் 592 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.