10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு தந்தது தொடர்பான வீடியோ சாட்சியங்கள் இருந்தும், நடவடிக்கை எடுக்கத் தவறிய துணை ஆய்வாளர் மீது போக்ஸோ சட்டம் பாய்கிறது.
கேரள மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்த மொய்தீன் குட்டி, கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி தியேட்டர் ஒன்றில் படம் பார்த்துக் கொண்டிருந்த 10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். தொடர்ந்து இரண்டு மணிநேரத்திற்கும் மேலாக மொய்தீன் அந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு தந்தபோது, சிறுமியின் தாயாரும் உடனிருந்துள்ளார். இந்த வீடியோ காட்சியை தியேட்டர் உரிமையாளர் குழந்தைகள் நல மையத்திற்கு வழங்கிய நிலையில், காவல்நிலையத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 26ஆம் தேதி இதுதொடர்பாக புகாரளித்தும் இதுதொடர்பாக எந்தவித நடவடிக்கையும் காவல்துறை மேற்கொள்ளவில்லை. இதனால் அதிருப்தியடைந்த குழந்தைகள் நலமையம், வீடியோ காட்சியை செய்தி ஊடகங்களுக்கு கடந்த சனிக்கிழமை வழங்கியது. இந்த வீடியோ காட்சி ஒளிபரப்பாகிய நிலையில், சம்மந்தப்பட்ட மொய்தீன் குட்டி மற்றும் உடந்தையாக இருந்த சிறுமியின் தாயார் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். சிறுமியின் வாக்குமூலமும் பதியசெய்யப்பட்டது.
சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த மொய்தீன் குட்டி
சம்மந்தப்பட்ட வீடியோ காட்சியில் மொய்தீன் குட்டி தெளிவாக அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் வந்திறங்கும் பென்ஸ் காரின் எண்ணை வைத்து காவல்துறையினர் கைது செய்திருக்கலாம். ஆனால், அவர்கள் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் அலட்சியம் காட்டியதில் உள்நோக்கம் இருந்ததாகவே குழந்தைகள் நலமையம் கருதியது. இதுகுறித்து புகாரளித்ததன் பேரில் இந்த வழக்கில் அலட்சியமாக செயல்பட்ட காவல்துறை துணை ஆய்வாளர் பேபி மீதும் போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் காவல்துறை அதிகாரி ஒருவர் மீது போக்ஸோ சட்டம் பாய்வது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.