
புதுச்சேரி அருகே பெட்ரோல் ஊற்றி இளைஞரை எரித்த வழக்கில் கைதான புதுச்சேரி பாஜக வணிகப் பிரிவு மாநில அமைப்பாளர், பாஜகவில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
திருச்சி மாவட்டம், பிராட்டியூர் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். 31 வயதாகும் சதீஷ்குமார், கூலித் தொழிலாளியாக தனது வாழ்க்கையை நடத்திவருகிறார். இவர் கடந்த 25ஆம் தேதி புதுச்சேரிக்கு வேலை தேடிச் சென்றுள்ளார். அப்போது புதுச்சேரி, மேட்டுப்பாளையம் நான்குமுனை சந்திப்பில் உள்ள பெட்ரோல் பங்க்கின் ஓரமாக சதீஷ்குமார் நள்ளிரவு தூங்கிக்கொண்டிருந்தார்.
அப்போது பெட்ரோல் பங்க்கின் உரிமையாளரும், பாரதிய ஜனதா கட்சியின் வணிகப் பிரிவு மாநில அமைப்பாளருமான ராஜமவுரியா உள்ளிட்ட 7 பேர் சதீஷ்குமாரை விசாரித்துள்ளனர். அப்போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் நடந்துள்ளது. இதன் காரணமாக சதீஷ்குமாரை தாக்கி, பெட்ரோலை ஊற்றித் தீ வைத்ததாக கூறப்படுகிறது.
இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர், அவர் மீது பரவிய தீயை அணைத்து, தீக்காயங்களுடன் அவதிப்பட்ட சதீஷ்குமாரை மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப் பதிவுசெய்த மேட்டுப்பாளையம் போலீசார், ராஜமவுரியா, அவரது தம்பி உள்ளிட்ட நான்கு பேரை கைதுசெய்து, காலாப்பட்டு சிறையில் அடைத்துள்ளனர்.
இந்த நிலையில், புதுச்சேரி மாநில பாஜக பொதுச் செயலாளர் மோகன் குமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “பாஜகவின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு மற்றும் மாநிலத் தலைவர் சாமிநாதன் ஆகியோருடன் இந்த சம்பவம் குறித்து ஆலோசனை செய்தோம். ராஜமவுரியா, கட்சிக்கு அவப்பெயர் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதால், அவர் பாஜகவின் அமைப்பாளர் பதவியிலிருந்தும், உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்படுகிறார்” என்று தெரிவித்துள்ளார்.