உத்தரபிரதேச மாநிலத்தில் ஆறு ஆண்டுகளில் மூன்று கட்சிகள் தாவி ஒருமுறை தனிக்கட்சிக் கண்ட அரசியல் பிரமுகர், தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருக்கும் சூழலில் பா.ஜ.க.வில் இருந்து விலகி சமாஜ்வாதி கட்சியில் இணைந்துள்ளார்.
உத்தரபிரதேச மாநிலத்தில் சட்டப்பேரவைக்கு ஐந்து முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர் சுவாமி பிரசாத் மௌரியா. இவர் தொடக்கத்தில் பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்தார். 1997 மற்றும் 2002, 2007 ஆம் ஆண்டுகளில் மாயாவதி தலைமையிலான அரசில் அமைச்சராக இருந்தார். கடந்த 2016- ஆம் ஆண்டு பகுஜன் சமாஜ் கட்சியின், சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார்.
ஆனால், 2017- ஆம் ஆண்டு சட்டப்பேரவைக்கான தேர்தல் அறிவிப்பு வெளியாவதற்கு சில மாதங்களுக்கு முன்பு பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து விலகி, லோக்தந்திரி பகுஜன் மஞ்ச் என்ற பெயரில் தனிக்கட்சியைத் தொடங்கி, மாயாவதிக்கு எதிராக செயல்பட்டு தனிக்கவனத்தை ஈர்த்தார்.
2017- ஆம் ஆண்டு நடைபெற்ற உத்தரபிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ.க. ஆட்சியைப் பிடித்தபோது, அந்த கட்சியின் தன்னை இணைத்துக் கொண்டார் சுவாமி பிரசாத் மௌரியா. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அமைச்சரவையில் இவருக்கு தொழிலாளர் நலத்துறை இலாக்கா வழங்கப்பட்டது.
இந்த நிலையில், உத்தரபிரதேச தேர்தல் அறிவிப்பு வெளியான சில தினங்களில் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததோடு, பா.ஜ.க.வில் இருந்து விலகியுள்ளார். தற்போது, பா.ஜ.க.வுக்கு நெருக்கடி தரும் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சியில் சுவாமி பிரசாத் மௌரியா இணைந்துள்ளார்.
ஐந்து ஆண்டுகளாக அமைச்சராக இருந்த அவர், இதர பிற்படுத்தப்பட்டோருக்கும், பட்டியலினத்தவருக்கும் யோகி ஆதித்யநாத் அரசு, எந்த திட்டத்தையும் செயல்படுத்தப்படவில்லை என குற்றம் சாட்டியுள்ளார்.
எனினும், இவரின் மகள் சங்கமித்ரா மௌரியா, பா.ஜ.க.வின் நாடாளுமன்ற உறுப்பினராக நீடித்து வருகிறார்.