கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் பணிபுரியும் ஷிகாவத் என்ற காவலர் பணி முடிந்து வீட்டிற்கு செல்லும் பொழுது மாம்பழங்களை திருடிய போது அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் சிக்கிக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இடுக்கி மாவட்டத்தில் ஆயுதப்படை அலுவலகத்தில் பணிபுரியும் ஷிகாப் என்ற காவலர் புதன் காலை பணி முடிந்து வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். காஞ்சிராப்பள்ளி அருகே சாலையில், மூடப்பட்டிருந்த கடையின் வாசலில் பெட்டிகள் நிறைய மாம்பழங்கள் இருந்ததைக் கண்ட அவர் தனது ஸ்கூட்டரை மாம்பழங்களின் அருகே நிறுத்திச் சுற்றும் முற்றும் சிறிது நிமிடங்கள் பார்த்து பின் விற்கப்பட வைத்திருந்த மாம்பழங்களில் 600 ரூபாய் மதிப்புள்ள 10 கிலோ மாம்பழங்களை எடுத்து தனது வண்டியின் பின் இருக்கையின் அடியில் வைக்கிறார்.
காவல்துறையில் இது குறித்து புகார் அளிக்கப்பட, காஞ்சிராப்பள்ளி காவல் துறையினர் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். சிசிடிவி காட்சிகளில் தெளிவாக அந்த நபரின் வண்டி எண் தெரிந்ததால் அதை வைத்துக் காவல் துறை விசாரணை செய்தது. விசாரணையில் திருடிய நபர் காவல் துறையில் பணிபுரிபவர் என்பது தெரிய வந்தது. மேலும் மாம்பழம் திருடிய காவலரை பணியிடைநீக்கம் செய்தும் உத்தரவிட்டுள்ளது.