Skip to main content

"எங்களை விட்டுவிடுங்கள்"... தொழிலாளிகளின் கதறல்... பிரசாந்த் கிஷோர் வெளியிட்ட வீடியோ...

Published on 30/03/2020 | Edited on 30/03/2020

பீகார் மாநிலத்தில் வெளிமாநில தொழிலாளர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாகக் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ள பிரசாந்த் கிஷோர், இதற்குப் பொறுப்பேற்று அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் பதவி விலகவேண்டும் எனத் தெரிவித்துள்ளார். 

 

prashant kishor posted video about bihar migrant workers

 

 

உலகளவில் கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,21,412 ஆக உயர்ந்துள்ளது. மேலும், உலகளவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 1,51,004 பேர் குணமடைந்துள்ளனர், 33,000க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இந்தியாவில் இந்த வைரசால் 1071 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாகக் கேரளாவில் 194 பேரும், மகாராஷ்டிராவில் 193 பேரும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ள சூழலில், இதிலிருந்து குணமடைந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் வெளிமாநில தொழிலாளர்கள் சரியான அடிப்படை வசதிகள் இன்றி தவித்து வருகின்றனர். வெளிமாநில தொழிலாளர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தையும் மாநில அரசுகள் உடனடியாக செய்து தர வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இருப்பினும் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் இடம்பெயர்ந்த வெளிமாநில தொழிலாளர்கள் அடிப்படை வசதிகளுக்கே சிரமப்பட்டு வருகின்றனர்.

இந்தச் சூழலில், பீகார் மாநிலத்தில் வெளிமாநில தொழிலாளர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள பிரசாந்த் கிஷோர், இதற்குப் பொறுப்பேற்று அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் பதவி விலகவேண்டும் எனத் தெரிவித்துள்ளார். தொழிலாளர்கள் வீட்டிற்குச் செல்ல வேண்டும் எனப் புலம்பும் அந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள அவர், "கரோனா வைரஸ் நோய்ப் பரவலைத் தடுக்கும் முயற்சியில் மற்றொரு திடுக்கிட வைக்கும் காட்சி. நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து பல கஷ்டங்களைச் சந்தித்து இங்கு வந்து உழைக்கும் தொழிலாளர்களின் இதயத்தைக் கலங்கடிக்கும் சமூக விலகல், தனிமைப்படுத்தல் ஏற்பாடு" எனக் கூறி #NitishMustQuit எனப் பதிவிட்டுள்ளார்.

பாட்னாவிலிருந்து 130 கிமீ தொலைவில் உள்ள உத்தரப்பிரதேச எல்லைப்பகுதியில் எடுக்கப்பட்டுள்ள இந்த காணொளியில், "காலையிலிருந்து பேருந்து வந்தவுடன் அனுப்பி விடுகிறோம் எனக் கூறுகின்றனர். ஆனால் பேருந்தும் வரவில்லை எங்களையும் அவர்கள் விட மறுக்கிறார்கள். எங்களுக்கு எதுவும் வேண்டாம், எங்களை விட்டுவிடுங்கள். அது போதும்" எனத் தொழிலாளர்கள் காத்திருக்கின்றனர். இந்த வீடியோ வெளியானதைத் தொடர்ந்து அப்பகுதியின் காவல்துறை அதிகாரி ஒருவர் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில், "அவர்களுக்குச் சோதனைகள் செய்யப்பட்டு, உணவு வழங்கப்பட்டு பின்னர்தான் அனுப்ப வேண்டும் என விதிமுறைகள் உள்ளன. ஆனால் அவர்கள் அவசரப்படுகிறார்கள்" எனத் தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்