சமாஜ்வாதி நிறுவனர் முலாயம் சிங்கின் சகோதரரான ஷிவ்பால் சிங் யாதவ் அக்கட்சியில் இருந்து விலகி பிரகதீஷல் சமாஜ்வாதி கட்சி லோகியா எனும் புதிய கட்சியைத் தொடங்கியுள்ளார்.
உ.பி.யில் சமாஜ்வாதி கட்சியும் பகுஜன் சமாஜ் கட்சியும் இணைந்து தேர்தலை சந்திக்கின்றனர். இந்த நிலையில் ஆளும் பாஜகவையும் இந்த கூட்டணியையும் எதிர்த்து போட்டியிட பிரகதீஷல் சமாஜ்வாதி கட்சி லோகியா கட்சியின் தலைவரான ஷிவ்பாலுடன் காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது.
இது முடிவு பெறாமல் காங்கிரஸ் உ.பி.யின் சில தொகுதிகளில் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டதால் ஷிவ்பால் அதிருப்தி அடைந்துள்ளார். இது குறித்து ஷிவ்பால் கூறும்போது, ''காங்கிரஸ் தலைவர்கள் அனைவருமே பொய்யர்கள். கடந்த ஒரு மாதமாக பலமுறை பேச்சுவார்த்தை நடத்தி முடிவுக்காக நாங்கள் காத்திருக்கும் நிலையில் காங்கிரஸ் தன் வேட்பாளர் பட்டியலை வெளியிடத் தொடங்கியுள்ளது.
அதனால், இவர்களுடன் நான் கூட்டணி வைக்க மாட்டேன்'' எனத் தெரிவித்தார். மேலும் அவர் இனி, ஒத்து கருத்துள்ள சிறிய கட்சிகளுடன் பேச இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.