இந்தியக் குடியரசுத் தலைவருக்கான தேர்தல் கடந்த ஜூலை மாதம் 18ம் தேதி நடந்தது. இதில், பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாளராக ஜார்க்கண்ட் முன்னாள் ஆளுநர் திரௌபதி முர்மு, தி.மு.க., காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா ஆகியோர் போட்டியிட்டனர். இதில், திரௌபதி முர்மு வெற்றி பெற்று நாட்டின் குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு, கடந்த 25ம் தேதி பதவியேற்றுகொண்டார்.
இந்நிலையில், குடியரசு துணைத் தலைவராக உள்ள வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் வரும் ஆகஸ்டு மாதம் 10ம் தேதியுடன் நிறைவடைகிறது.
அதன் காரணமாக இந்தியக் குடியரசுத் துணைத் தலைவருக்கான தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. இதில், பாஜக கூட்டணி சார்பில் ஜகதீப் தன்கர் போட்டியிடுகிறார். எதிர்க்கட்சிகள் சார்பில் மார்கரெட் ஆல்வா போட்டியிடுகிறார். இந்தத் தேர்தலில் மக்களவை, மாநிலங்களவையைச் சேர்ந்த 788 எம்.பி.க்கள் வாக்களிக்கின்றனர். இன்று காலை துவங்கியுள்ள இந்தத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு முடிவடைகிறது. அதன்பின் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படவுள்ளது.