இந்தியாவில் கரோனா இரண்டாவது அலை ஏற்பட்டு, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாட்டில் கரோனா நிலை குறித்து, பிரதமர் நேற்று (14.04.2021) மாநில/யூனியன் பிரதேச ஆளுநர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்தநிலையில், இந்தியாவில் முதன்முறையாக ஒரேநாளில் 2 லட்சம் பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இந்தியாவில் நேற்று ஒரேநாளில் 2 லட்சத்து 739 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. மேலும் தொடர்ந்து இரண்டாவது நாளாக கரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்துள்ளது. நேற்று ஒரேநாளில் 1,038 பேர் கரோனாவிற்குப் பலியாகியுள்ளனர். அதேநேரத்தில் நேற்று 93,528 பேர் கரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் மஹாராஷ்ட்ராவில் 58,952 பேருக்கும், டெல்லியில் 17,282 பேருக்கும் கரோனா உறுதியாகியுள்ளது. உத்தரப்பிரதேசத்தில் நேற்று ஒரேநாளில் 20,510 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கும் கரோனா உறுதியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.