Skip to main content

போலீஸ் தடியடி - எம்.எல்.ஏ. சட்டை கிழிந்தது

Published on 13/10/2017 | Edited on 13/10/2017
போலீஸ் தடியடி - எம்.எல்.ஏ. சட்டை கிழிந்தது

புதுவை கூட்டுறவு சர்க்கரை ஆலையின் அனைத்து கரும்பு விவசாயிகள் சங்கம் மற்றும் அனைத்து தொழிற்சங்கங்களின் ஒருங்கிணைந்த கூட்டமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெறும் என அறிவிக்கபட்டு இருந்தது. போராட்டத்திற்கு காவல்துறையின் அனுமதியும் பெறப்பட்டிருந்தது. 

ஆனால் திடீரென நேற்று இரவு போராட்டத்திற்கு போலீசார் தடை விதித்தனர். போலீசாரின் தடையை மீறி திட்டமிட்டபடி போராட்டம் நடத்தப்படும் என்று டி.பி.ஆர். செல்வம் எம்.எல்.ஏ. அறிவித்தார். அதன்படி போராட்டம் நடத்த புதுவை மற்றும் தமிழக பகுதி கரும்பு விவசாயிகள், ஆலை தொழிலாளர்கள் மற்றும் டி.பி.ஆர். செல்வம் எம்.எல்.ஏ. ஆதரவாளர்கள் இன்று காலை லிங்கா ரெட்டி பாளையம் பெட்ரோல் பங்க் எதிரே ஒன்று திரண்டனர்.

பின்னர் அவர்கள் அனைவரும் சர்க்கரை ஆலையை நோக்கி ஊர்வலமாக வந்தனர். அப்போது போலீசார் பேரிக்காடு அமைத்து ஊர்வலத்தினரை தடுத்து நிறுத்தினர். இதனால் போராட்டக்காரர்கள் போலீசாரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். அப்போது திடீரென போலீசாருக்கும், போராட்டத்தில் ஈடுபட வந்தவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில், டி.பி.ஆர். செல்வம் எம்.எல்.ஏ.வின் சட்டை கிழிந்தது. தொடர்ந்து அவர்கள் போலீசாரின் தடையை மீறி போராட்டம் நடத்த ஆலையை நோக்கி சென்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட டி.பி.ஆர். செல்வம் எம்.எல்.ஏ. உள்பட 100-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி அழைத்து சென்றனர்.

சார்ந்த செய்திகள்