மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், அக்கட்சியின் பொதுச் செயலாளருமான சீதாராம் யெச்சூரி (72 வயது) வயது முதிர்வு காரணமாக நீண்ட காலமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், நிமோனியா காய்ச்சலுக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இவர் சிகிச்சை பலனின்றி இன்று (12.09.2024) காலமானார்.
ஆந்திரா மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்ட இவர் சென்னையில் கடந்த 1952ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12ஆம் தேதி பிறந்தார். ஆந்திரா மற்றும் டெல்லியில் பள்ளிப் படிப்பை முடித்து டெல்லி ஸ்டீபன்ஸ் கல்லூரியில் பட்டப்படிப்பைப் பயின்றுள்ளார். டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். மேலும் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றார். அப்பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்கத் தலைவராக 3 முறை பதவி வகித்து வந்தவர் ஆவார்.
கடந்த 1974ஆம் ஆண்டு மாணவர் கூட்டமைப்பில் இணைந்த இவர் அடுத்த ஆண்டே (1975) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். அக்கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர், பொலிட் ப்யூரோ எனப் பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்தார். 1984 ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழுவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதோடு அக்கட்சியின் தலைமைக் குழு உறுப்பினராக 32 ஆண்டுகள் பணியாற்றினார். 1975ஆம் ஆண்டு நாட்டில் அவசர நிலை பிரகடணப்படுத்தப்பட காலத்தில் அரசுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தவர் ஆவார். இவர் பல்வேறு புத்தகங்களையும் எழுதியுள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு 2005ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரை நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகித்து வந்தார். அப்போது பல்வேறு விவாதங்கள் மற்றும் முக்கிய தலைப்புகளில் பேசி கவனத்தை ஈர்த்தவர் ஆவார். இதற்கிடையே 2015ஆம் ஆண்டு அக்கட்சியின் பொதுச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டார். அதன் பின்னர் மறையும் வரை தொடர்ந்து 3 முறை அப்பதவியை வகித்து வந்தார். கடந்த 2021 ஆம் ஆண்டு அவரது மகன் ஆசீஸ் யெச்சூரி (வயது 34) கொரான தொற்றால் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
மருத்துவ மாணவர்களின் கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி நோக்கங்களுக்காக சீதாராம் யெச்சூரியின் உடலை அவரது குடும்பத்தினர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்குத் தானமாக வழங்கியுள்ளனர். இது தொடர்பாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் மக்கள் தொடர்பு அதிகாரியும், மருத்துவ பேராசிரியருமான ரிமா டாடா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “72 வயதான சீதாராம் யெச்சூரி கடந்த 19ஆம் தேதி நிமோனியாவால் பாதிக்கப்பட்டு எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று மாலை 03:05 மணிக்குக் காலமானார். இதனையடுத்து மருத்துவ மாணவர்களின் கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி நோக்கங்களுக்காக அவரது உடலை அவரது குடும்பத்தினர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தானம் செய்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.