மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகள், நேற்று (26.01.2021) ட்ராக்டர் பேரணி நடத்தினர். இந்தப் பேரணியில் வன்முறை வெடித்தது. போலீஸார் விவசாயிகள் மீது தடியடி நடத்தியதோடு, கண்ணீர் புகைக்குண்டுகளையும் வீசினர்.
இதனிடையே டெல்லி செங்கோட்டையில் சிலர், சீக்கியர்களின் புனிதக் கொடியை ஏற்றினர். இதற்கு கடும் கண்டங்கள் எழுந்து வருகிறது. இந்த நிலையில் பஞ்சாபி நடிகர் தீப் சித்து, விவசாயிகளை செங்கோட்டையை நோக்கி வழிநடத்தியதாகவும், செங்கோட்டையில் சீக்கியர்களின் புனிதக் கொடி ஏற்றப்பட்டதற்கு அவரே காரணம் எனவும் விவசாயிகள் குற்றம் சாட்டினார்.
இதனையடுத்து செங்கோட்டையில் கொடியேற்றியதை தீப் சித்து ஃபேஸ்புக் லைவ்வில் ஒப்புக்கொண்டார். இதுதொடர்பாக அவர், எதிர்ப்பை தெரிவிக்கும் விதமாக செங்கோட்டையில் நிஷன் சாஹிப்பை (சீக்கியர்களின் புனிதக் கொடி) ஏற்றினோம். தேசியக்கொடியை அகற்றவில்லை எனக் கூறியுள்ளார்.
இந்நிலையில், செங்கோட்டையில் சீக்கியர்களின் புனிதக் கொடியை ஏற்ற காரணமாக அமைந்த தீப் சித்து சீக்கியர் அல்ல. அவர் பாஜகவின் ஊழியர் என பாரதிய கிசான் யூனியன் அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. இதுதொடர்பாக அந்த அமைப்பு, "தீப் சித்து ஒரு சீக்கியர் அல்ல, அவர் பாஜகவின் ஊழியர். பிரதமருடன் அவர் இருக்கும் படம் உள்ளது. இது விவசாயிகளின் இயக்கம், இது அப்படியே தொடரும். சிலர் உடனடியாக இந்த இடத்தை விட்டு வெளியேற வேண்டியிருக்கும். தடுப்புகளை உடைத்தவர்கள் ஒருபோதும் இயக்கத்தின் ஒரு பகுதியாக இருக்க மாட்டார்கள்" எனத் தெரிவித்துள்ளது.