"உன்னைப் பத்தி நக்கீரனில் அசிங்கமா செய்தி போட்டும் இன்னும் சாகாமல் என் வீட்டிற்கு ஏன்டா வந்த...' என்று அசிங்கமாகத் திட்டி, என்னிடம் சண்டை போட்டு, என்னை அடித்துக் கீழே தள்ளிவிட்டதில் எனது வலது கையில் வீக்க காயம் ஏற்பட்டது. பின்பு என் மகன் காலில் போட்டிருந்த செருப்பை எடுத்து, என் தலையிலும் கையிலும் மாறிமாறி அடித்துவிட்டு, வீட்டில் இருந்த இரும்புக் கம்பியை எடுத்து செத்துத் தொலைடா என்று அடிக்கவந்தார். வயதான காலத்தில் நிம்மதியாக வாழவிடாமல், என்னை அசிங்கப்படுத்தி மன உளைச்சலுக்கு ஆளாக்கிய என் மகன் ஜோயல்சுகுமார் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும்.’ -மதுரை தல்லாகுளம் காவல்நிலையத்தில் 19-10-2023ஆம் தேதி 83 வயது முதியவரான ஆல்பர்ட் சுந்தர்ராஜ் மேற்கண்டவாறு புகாரளிக்க, அவருடைய மகன் ஜோயல் சுகுமார் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவானது.
ஜோயல்சுகுமார் நம்மிடம் "என் தந்தையை நான் அடிக்கவில்லை. அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை. 19-10-2023 அன்று நான் சென்னையில் இருந்தேன். முழுக்க முழுக்கப் புனையப்பட்ட பொய்ப்புகாரில் என்னைக் கைது செய்து சிறையில் அடைத்தே ஆகவேண்டும் என்பதில் தல்லாகுளம் காவல்நிலைய சார்பு ஆய்வாளர் ஏனோ தீவிரம் காட்டினார். உயர் நீதிமன்றத்தில் நான் முன்ஜாமீன் பெற்று தல்லாகுளம் காவல்நிலையத்தில் கையெழுத்திட்டு வருகிறேன்''’என்று பரிதவிப்புடன் பேசினார். ‘83 வயதில் ஆல்பர்ட் சுந்தர்ராஜ், தன் மகன் மீது ஏன் பொய்ப்புகார் அளிக்கவேண்டும்? ஜோயல் சுகுமார் தனது தந்தையை நக்கீரன் மூலம் எப்படி அசிங்கப் படுத்த முடியும்?’என்ற கேள்விக்கான விடையில் உவ்வே’ சமாச்சாரங்கள் கொட்டிக் கிடக்கின்றன.
2023 செப்டம்பர் 23-26 நக்கீரன் இதழில், "போர்வைக்குள் ஜெபம்! -போலி பாதிரியாரின் கிளுகிளு விளையாட்டு!'’என்னும் தலைப்பிலும், 2023, அக். 16-20 நக்கீரன் இதழில் "நக்கீரன் செய்தி எதிரொலி! ஏமாற்றிய பெண்களிடம் மிரட்டல்!' என்னும் தலைப்பிலும், ஆல்பர்ட் சுந்தர்ராஜின் பேரன் டேனி தேவஅனுக்கிரகம், பாதிரியார் எனச் சொல்லிக்கொண்டு பெண்கள் சிலரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதை புகைப்படங்கள், ஆடியோ, வீடியோ மற்றும் வாட்ஸ்-ஆப் ஆதாரங்களுடன், பாதிக்கப்பட்ட இளம்பெண்களின் பேட்டியுடன் செய்தி வெளியிட்டோம்.
இதில் கொடுமை என்னவென்றால், இறந்துபோன தனது மூத்த மகன் சாமுவேல் ராஜ்குமாரின் மகன் டேனி தேவஅனுக்கிரகத்தின் லீலைகள் குறித்து நக்கீரனில் செய்தி வந்ததால் அசிங்கப்பட்டுவிட்டேன் என்று தல்லாகுளம் காவல்நிலையத்தில் அளித்த புகாரில் குறிப்பிட்டுள்ள ஆல்பர்ட் சுந்தர்ராஜ், அறிந்தோ அறியாமலோ அப்போது நம்மிடம் “"டேனி பற்றி புகாரா? சின்னவயசுப் பையன் அப்படி இப்படி இருக்கத்தான் செய்யும். அந்த சென்னைக்காரப் பொண்ணு அவனைப் பற்றி சொன்னுச்சா? நான் எவ்வளவோ சொன்னேன். இவன் கேட்கல'’என்று நம்மிடம் உண்மையைச் சொன்னதும், அதை நாம் வீடியோவாகப் பதிவு செய்ததும்தான். பொய்ப்புகார் அளித்து வழக்கில் சிக்கவைக்கும் அளவுக்கு ஜோயல் சுகுமார் மீது அவருடைய தந்தை ஆல்பர்ட் சுந்தர்ராஜுக்கு என்ன கோபம்?
மதுரை பசுமலை சர்ச்சில் ஆல்பர்ட் சுந்தர்ராஜை பேட்டிக்காக நாம் சந்தித்தபோது "டேனி பற்றி யார் கேட்டாலும் எதுவும் சொல்லக்கூடாது என்று என் மகன் பிரேம் (இவர் ஆல்பர்ட் சுந்தர்ராஜின் இரண்டாவது மகன்) சொல்லியிருக்கிறான். மீறிப் பேசினால் என்னை அடிப்பான். நீங்கள் போய்விடுங்கள்''’என்று முதலில் பேசுவதற்கே பயந்தார். அதேநேரத்தில், டேனி குறித்து புலம்பவும் செய்தார். இந்நிலையில், நக்கீரன் இதழில் செய்தி வெளிவந்ததைத் தொடர்ந்து, நக்கீரன் டி.வி.யிலும் "போர்வைக்குள் ஜெபம்! போலி பாதிரியார் அடித்த லூட்டி... விசாரிக்கப்போன நக்கீரன்!'’ என்னும் தலைப்பில் 10 மாதங்களுக்கு முன் தகுந்த ஆதாரங்களுடன் 14 நிமிட வீடியோ வெளியிட்டிருந்தோம். அந்த வீடியோ பேட்டியில் ஆல்பர்ட் சுந்தர்ராஜ் “"என் பேரன் செய்தது தப்புதான்' ’என்று அழுத்தமாகக் கூறியிருந்தார்.
நக்கீரன் டி.வி. வெளியிட்ட வீடியோவைப் பார்த்து தந்தை ஆல்பர்ட் சுந்தர்ராஜுவிடம் டென்ஷனாகியிருக்கிறார் மகன் பிரேம்குமார். டேனி வைத்திருந்த பெண் தொடர்புகள் குறித்த ஆதாரம், தன்னுடைய அண்ணன் ஜோயல் சுகுமார் மூலம்தான் நக்கீரனுக்குப் போயிருக்கும் என்று அவராகவே நினைத்து ஆத்திரப்பட்டிருக்கிறார். டேனியின் பாலியல் தொடர்பான விவகாரங்கள் குறித்த வீடியோவில், தன் அண்ணனின் மனைவியும், டேனியின் அம்மாவுமான ரோஸ்லின் சாமுவேல், மதுரை, பசுமலை, பெராக்கா நகரில் நடத்திவரும் ஒளிவெளிச்சம் ஜெபக்கூடத்தின் பெயரும் அடிபட்டதால் எரிச்சலானார். செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரியில் தன் மனைவி வனிதா நடத்திவரும் மெட்ரிக் பள்ளி வட்டாரத்திலும் அந்த வீடியோ பரவி, பலரும் விசாரித்தபோது, டேனியின் ஒழுங்கீனத்தால் மொத்த குடும்பமும் பொதுவெளியில் அவமானப்பட நேர்ந்ததை நினைத்துச் சீற்றமானார். அதனால்தான், தன் தந்தை ஆல்பர்ட் சுந்தர்ராஜை தூண்டிவிட்டு, அண்ணன் ஜோயல் சுகுமார் மீது தல்லாகுளம் காவல்நிலையத்தில் பொய்யான புகாரைக் கொடுக்க வைத்துள்ளார். காவல்துறை வட்டாரத்தில் தனக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி, தல்லாகுளம் காவல்நிலைய சார்பு ஆய்வாளருக்கு அழுத்தம் தந்து, வழக்கு பதியவைத்துள்ளார்.
அண்ணன் ஜோயல் சுகுமாரை பொய் வழக்கில் சிக்கவைத்து ஆத்திரத்தைத் தணித்துக்கொண்ட பிரேம்குமார், டேனி குறித்து நக்கீரன் டிவி வெளியிட்ட வீடியோவை டெலீட் செய்துவிட வேண்டும் என்பதில் குறியாக இருந்தார். பிரேமானந்தா முதல் நித்தியானந்தா வரை, ஆன்மிகத்தின் பெயரால் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டவர்களைத் தோலுரித்துள்ளது நக்கீரன். பாஸ்டர் என்ற போர்வையில் இளம்பெண்களின் வாழ்க்கையைச் சீரழித்த டேனியை மட்டும் விட்டுவைக்குமா? டேனியால் பாதிக்கப்பட்ட ஷெரோன் என்பவர், டேனியின் சித்தப்பா பிரேம்குமாரால் இ-மெயில் மிரட்டலுக்கு ஆளாகியுள்ளார். அதில், "நீதித்துறையை ஏமாற்றவேண்டாம். ரூ.1.5 லட்சத்தை என் மருமகன் டேனியிடம் திருப்பிக்கொடு. எனக்கு நீதிபதியைத் தெரியும். உன்னைப் பற்றி சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிப்பேன்'’என மிரட்டியிருக்கிறார்.
டேனியின் உண்மை முகத்தை அறிந்துகொண்ட ஷெரோன் நம்மிடம் பேசினார். "எனக்கு 2020ல இருந்து டேனியோட பழக்கம். டேனி பல பெண்களை ஏமாற்றியது உண்மைதான். எப்படின்னா.. ஃபேஸ்புக்ல கான்டாக்ட் பண்ணி, ஆண்டவர் தீர்க்கதரிசனம் தர்றாரு. உங்களத்தான் ஆண்டவர் காட்டுறாரு. இந்தமாதிரி ஃபேக்கா ரெடி பண்ணி, எல்லாம் ஃபேக்கா பண்ணுவான். இவனோட எய்ம் என்னன்னா.. வசதியான பொண்ணுங்க கிடைச்சா லைஃப்ல செட்டில் ஆயிறணும்கிறதுதான். அதனால டேனி டார்கெட் பண்ணுறது, ட்ரை பண்ணுறது எல்லாமே வசதியான பொண்ணுங்களத்தான். நமக்கு உண்மை தெரிஞ்சி, ஏன் இப்படி பண்ணுறன்னு கேட்டா, அதுங்களா வந்து மாட்டிருச்சு. நானும் தெரியாம பண்ணிட்டேன். என்னோட தாய் சரியில்ல.. எனக்கு தகப்பனும் இல்ல. நான் இப்படி வளர்ந்துட்டேன். அப்படி இப்படின்னு சொல்லி, இனி எந்த தவறும் செய்யமாட்டேன்னு சொல்லுவான். தன்னை நல்லவனா காட்டிக்கிறதுக்காக, கூட இருக்கவங்கள, அதான் என்னோட பேரை தப்புத் தப்பா சொல்லி வைக்கிறது, அவ தப்பானவன்னு சொல்லுவான். அப்பத்தானே எஸ்கேப்பாக ஈஸியா இருக்கும்.
இந்தமாதிரி காரியங்கள் எல்லாம் செஞ்சி, எவ்வளவு வாங்க முடியுமோ, எவ்வளவு பணம் கறக்க முடியுமோ, எல்லாம் பண்ணிருவான். நகை எல்லாம் வேற திருடிட்டுப் போயிட்டான். இந்த மாதிரி எல்லாத்தயும் பண்ணிட்டு, எது கேட்டாலும் அழுது கால்ல விழுந்து, இனி செய்யமாட்டேன்னு நடிச்சி நடிச்சி ஏமாத்திருவான். கூட இருந்துக்கிட்டே, பழகுன பூரா பெண்களோட பேரையும் கெடுத்திருவான். தப்பு பண்ணிட்டேன்னு டேனி என்கிட்ட ஒத்துக்கிட்டது ஒரு பத்து பெண்கள் இருக்கும். கால்ல விழுந்து அழுது, அய்யோ, நான் தெரியாம பண்ணிட்டேன். இனி இந்த தவறெல்லாம் நான் செய்யமாட்டேன். இனிமே நான் ஒழுக்கமா இருக்குறேன்னு சொன்னான். கால்ல விழுந்து அழும்போது, சரி பாவம் என்ன பண்ணுறது, பொழச்சிப் போறான்னு நினைச்சேன். ஆனா.. இன்னும் திருந்தாம இந்தமாதிரி வேலைகளை செஞ்சிட்டு இருக்கான்'' என்று நொந்துகொண்டார். பல பெண்களின் வாழ்க்கையை நாசமாக்கிய தன் அண்ணன் மகன் டேனியின் பாலியல் குற்றங்களை கண்டிக்காமல், டேனியின் சித்தப்பா பிரேம்குமார், உண்மையை அம்பலப்படுத்திய நக்கீரன் மீது பாய்வது எந்தவிதத்தில் நியாயம்?
நக்கீரனின் உறுதியால் ஆத்திரம்கொண்ட பிரேம்குமார், முகநூல் மற்றும் வாட்ஸ்-ஆப் வாயிலாக ஆசிரியர் குழு மற்றும் செய்தியாளர்கள் குறித்து பொதுவெளியில் தொடர்ந்து அவதூறு கருத்துகளைப் பரப்பி வரும் நிலையில், பிரேம் குமாரை அவருடைய கைபேசி எண்ணுக்கு தொடர்புகொண்டோம். தொடர்ந்து நமது லைனுக்கு வரவில்லை. அவர் விளக்கமளிக்க முன்வந்தால் பிரசுரிக்கத் தயாராக இருக்கிறோம். பேரன் டேனியின் குற்றச் செயல் குறித்து தாத்தா ஆல்பர்ட் சுந்தர்ராஜ் ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருக்கிறார். பாதிக்கப்பட்ட இளம்பெண்கள் குமுறலாகப் பேட்டியளித்துள்ளனர். புகைப்படங்கள், ஆடியோ மற்றும் வீடியோ ஆதாரங்கள் டேனிக்கு எதிராக வரிசைகட்டி நிற்கின்றன.
இந்நிலையில், ஜெபக் கூடத்தில் டேனி நடத்திய பாலியல் கொடுமைகளுக்குத் துணைபோவதோடு மட்டுமல்லாமல், உண்மையை அம்பலப்படுத்திய நக்கீரன் மீது பாய்வதா? சைபர் குற்றங்களுக்காக பிரேம்குமார் மீது சட்ட நடவடிக்கை பாய நேரிடுமென எச்சரிக்கிறோம்.
குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்; நிஜம் சுடும்!
இவரா கர்த்தரிடம் நமக்காக பேசுபவர்? வெளியான பாஸ்டரின் மறுபக்கம்.. ஆதரங்களால் அதிரும் ஜெபக்கூடம்! #NakkheeranKalam #NakkheeranTV #pastordanny pic.twitter.com/g6IGMzsG48— Nakkheeran (@nakkheeranweb) September 5, 2024