இந்த ஆண்டு நடைபெற்ற இளநிலை நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு, ஆள்மாறாட்டம் உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் தொடர்பாக புகார்கள் எழுந்து, தற்போது உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த விவகாரம் நாடு முழுவதும் பேசுபொருளாகியுள்ளது. இதற்கிடையே கடந்த ஜூன் மாதம் நடைபெற இருந்த முதுநிலை நீட் தேர்வு சர்ச்சைகள் காரணமாக தேர்வு நாள் மாற்றப்பட்டு ஆகஸ்ட் 11ஆம் தேதி நடைபெறும் என அறிவிப்பு வெளியாகி இருந்தது.
இத்தகைய சூழலில் தான் முதுநிலை நீட் தேர்வுக்கான வினாத்தாளும் முன்கூட்டியே கசிந்ததாக மீண்டும் ஒரு பூகம்பம் வெடித்தது மாணவர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. முதுநிலை நீட் தேர்வு நாளை மறுநாள் நடைபெற உள்ள நிலையில் சமூக வலைத்தளங்களில் முன்கூட்டியே தேர்வுக்கான வினாத்தாள் கசிந்ததாக சர்ச்சை எழுந்துள்ளது. மேலும் ரூ. 70 ஆயிரம் வரை வினாத்தாளுக்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு டெலிகிராம் குழுவில் தகவல்கள் பகிரப்பட்டுள்ளது தொடர்பாகவும் புகார்கள் எழுந்தன. இருப்பினும் மத்திய அரசின் தேசிய தேர்வு வாரியம் இந்த தகவலை இதனை முற்றிலுமாக மறுத்தது.
இதையடுத்து வினாத்தாள் வெளியாகி விற்பனைக்கு வந்ததாகத் தகவல் பரவியதையடுத்து, முதுநிலை நீட் தேர்வை ஒத்திவைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. மாணவர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவில் தேர்வு மையங்கள் ஒதுக்கீட்டில் குளறுபடி, தங்களது இருப்பிடத்தில் இருந்து வெகு தொலைவில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன உள்ளிட்ட பிரச்சனைகளையும் சுட்டிக் காட்டியிருந்தனர்.
இது தொடர்பான வழக்கு இன்று (09.08.2024) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அறிவித்திருந்தார். இந்நிலையில் இன்று உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு தொடரப்பட்ட 50 மாணவர்கள் தரப்பில் 'காலை ஒரு மையம் மாலை ஒரு மையம் என்று நிறையக் குளறுபடிகள் இருக்கிறது. எனவே முதுநிலை நீட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
அதற்கு நீதிபதிகள் இப்படி கடைசி நேரத்தில் மனுவை தள்ளிவைக்க வேண்டும்; தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று கேட்பதெல்லாம் வாடிக்கையாக நடந்து வருகிறது. மாணவர்கள் எதற்காக இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார்கள் என்பதை எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. நாம் மிகப்பெரிய நாடாக இருக்கின்றோம். தேர்வுகளும் மிகப்பெரிய அளவில் நடக்கிறது. அப்படி இருக்கும் பொழுது சிறு சிறு விஷயங்கள் என்பதை நாம் பார்க்க வேண்டியதாக இருக்கிறது. இரண்டு லட்சம் மாணவர்களின் எதிர்காலம் சார்ந்த விஷயத்தை 50 மாணவர்கள் நீதிமன்றத்தை நாடி இருக்கிறார்கள் என்பதற்காக ஒத்திவைக்க முடியாது. தற்போதைய சூழ்நிலையில் நீட் தேர்வை வதள்ளிவைப்பது என்பது முடியாத காரியம்' என்று மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.