அருந்ததியர் மக்களுக்குப் பட்டா வழங்கிட வருவாய் அலுவலக நிர்வாக அலகு அமைக்கத் தனி மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் போதுமான வட்டாட்சியர்கள் உள்ளடக்கிய குழு அமைத்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனத் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நீலகிரி திமுக எம்.பி. ஆ.ராசா கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், “கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருப்பூர், ஈரோடு, கோவை உள்ளிட்ட வருவாய் மாவட்டங்களில் வசிக்கும் ஆதிதிராவிடர் அருந்ததியர் மக்களுக்கு போதுமான வாழ்விட வசதிகள் இல்லை என்பதை தங்களின் கவனத்திற்கு பல்வேறு சமூக மற்றும் அரசியல் அமைப்புக்கள் ஏற்கனவே கொண்டு வந்துள்ளன. எனது நீலகிரி நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட அவினாசி, மேட்டுப்பாளையம் மற்றும் பவானி சாகர் பகுதிகளில் உள்ள வருவாய் கிராமங்களில் உள்ள தரிசு நிலங்களைக் கண்டறிந்து, 500க்கும் மேற்பட்ட குடியிருப்பு பட்டாக்களை அரசின் மூலம் ஏற்கனவே வழங்கி உள்ளோம்.
அதுபோலவே மற்ற மாவட்டங்களிலும் அருந்ததிய மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கிட போதுமான அளவு அரசு தரிசு நிலங்கள் உள்ளதாக வருவாய்த்துறை அலுவலர்கள் மூலம் தெரிய வருகிறது. எனவே, இம்மாவட்டங்களில் உள்ள அரசு தரிசு நிலங்களைக் கண்டறிந்து, கையகப்படுத்தி இப்பகுதியில் கணிசமான அளவு மக்கள் தொகை கொண்ட அருந்ததியர் மக்களுக்கு வழங்கிட ஏதுவாக ‘வருவாய் அலுவலக நிர்வாக அலகு’ [Revenue Administrative Unit] ஒன்றை, தனி மாவட்ட வருவாய் அலுவலர் ஒருவர் தலைமையில் ஒரு கோட்டாட்சியர் மற்றும் போதுமான வட்டாட்சியர்கள் உள்ளடக்கிய குழு அமைத்து பூர்வாங்க பணிகளை மேற்கொள்ள வேண்டுகிறேன். தலைமைச் செயலாளர் அல்லது வருவாய் செயலாளர் ஆகியோரின் கண்காணிப்பில் இப்பணிகளைக் குறித்த காலத்தில் முடித்திடும் வகையில் உரிய ஆணைகள் வழங்கிடவும் வேண்டுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.