மதுவிலக்கு தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக நடத்தும் மாநாட்டில் அ.தி.மு.கவினரும் பங்கேற்கலாம் என வி.சி.க தலைவர் திருமாவளவன் தெரிவித்திருந்தார். திருமாவளவன் அ.தி.மு.கவிற்கு அழைப்பு விடுத்திருந்தது, திருமாவளவன் தி.மு.கவில் இருந்து பிரிந்து அ.தி.மு.கவோடு கூட்டணி வைக்கப்போகிறார் என்று பலரும் கருத்து தெரிவித்ததில், இந்த விவகாரம் தமிழக அரசியலில் பேசுபொருளானது. இதற்கு கூட்டணியைச் சார்ந்தவர்கள், கூட்டணியைச் சாராதவர்கள் என பலரும் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்த விவகாரம் அடங்குவதற்குள், ‘ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு வேண்டும் என வேண்டும்’ என்று 'எக்ஸ்' சமூக வலைத்தளத்தில் வி.சி.க தலைவர் திருமாவளவன் பேசிய வீடியோ ஒன்று வெளியானது பேசு பொருளாகி உள்ளது. மேலும், அந்த வீடியோ உடனடியாக டெலிட் செய்யப்பட்டிருந்ததது பெரும் விவாதத்தை கிளப்பியது. விசிக தலைவர் திருமாவளவனின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் காலையில் இருந்து 2 முறை வீடியோவை பதிவிட்டு நீக்கிய நிலையில், ஆட்சி, அதிகாரத்தில் பங்கு எனும் வீடியோவை 3வது முறையாக மீண்டும் திருமாவளவனின் எக்ஸ் தளத்தில் பகிரப்பட்டு பேசுபொருளானது.
ஆட்சி, அதிகாரத்தில் பங்கு திருமாவளவன் பேசியது சர்ச்சையான இந்த நிலையில் அமெரிக்கா பயணத்தை முடித்து சென்னை திரும்பிய முதல்வர் மு.க.ஸ்டாலினை, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் இன்று (16.09.2024) காலை 11 மணிக்குச் சென்னை அண்ணா அறிவாயலத்தில் சந்தித்தார். இந்த சந்திப்பில் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, விசிக எம்.பி ரவிக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அக்டோபர் 2ஆம் தேதி விசிக சார்பில் நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டிற்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்வதற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய திருமாவளவன், “ஆயிரக்கணக்கான கைம்பெண்கள், கண்ணீர் சிந்த வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களின் கோரிக்கையை தான் முன்னிறுத்தி இந்த மாநாட்டை நடத்துகிறோம். அக்டோபர் 2ஆம் தேதி விசிக சார்பில் நடைபெறும் மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்க முதல்வரிடம் அழைப்பு விடுத்தேன். பேசப்பட்ட விவரங்களில், இரு தரப்பு கருத்தும் ஒன்று தான், இந்த மாநாட்டில் திமுக சார்பில் இரண்டு பேர் கலந்துகொள்வார்கள் என்று முதல்வர் உறுதியளித்தார். படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்தவும் அவர் உறுதியளித்தார். இந்த கருத்தில் உடன்படுபவர்கள் யாராக இருந்தாலும் எங்களுடைய மாநாட்டில் கலந்துகொள்வதற்கு எங்களுக்கு எந்தவித ஆட்சேயபணமும் இல்லை. ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்பதை நாங்கள் நீண்ட நாட்களாக வலியுறுத்தி வருகிறோம். திமுகவுக்கும், விசிகவுக்கும் எந்த விரிசலும் இல்லை; எந்த நெருடலும் இல்லை. நாங்கள் கொள்கை நிலைப்பாட்டில் உறுதியாக இருந்து முன்னிறுத்துகிறோம். இது கூட்டணிக்கான பிரச்சனை இல்லை. இது எல்லோருக்குமான பிரச்சனை. அனைவரும் இணைந்து குரல் கொடுப்போம். மதுவை ஒழிக்க தனிச் சட்டம் இயற்ற வேண்டும். தேசிய மதுவிலக்கு கொள்கை சட்டத்தை ஏன் கொண்டுவரக் கூடாது என்பதே எங்களின் கோரிக்கை” என்று கூறினார்.
முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்திப்பதற்கு முன்னதாக விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “மாநாட்டினுடைய முதன்மையான நோக்கம் இரண்டு தான். ஒன்று, தமிழ்நாட்டில் மதுபான கடைகளை படிப்படியாக குறைத்திட வேண்டும். இரண்டு, தேசிய கொள்கையை வரையறுக்க அனைத்து கட்சியினரும் ஒருங்கிணைக்க வேண்டும். திமுகவுக்கும், விடுதலை சிறுத்தைகள் கட்சி அந்த வேண்டுகோளை வைக்கிறோம். இந்திய ஒன்றிய அரசு, அரசியலமைப்பு சட்டம் 47 உறுப்பின்படி, தேசிய மதுவிலக்கு கொள்கையை உருவாக்கி தனிச்சட்டம் ஒன்றை ஏற்ற வேண்டும் என்று திமுகவும் வலியுறுத்த வேண்டும் என்பது எங்களுடைய வேண்டுகோள். இது தொடர்பாக, முதல்வரை நாங்கள் சந்தித்து பேசுகிறோம். தேர்தல் அரசியலுக்காக நாங்கள் மாநாடு நடத்தவில்லை. கண்ணீர் மல்க தாய்மார்களின் எண்ணத்தை ஈடேற்றுவதற்காக இந்த மாநாடு நடைபெறவுள்ளது. நாங்கள், கூட்டணிக்காக இந்த கணக்கை போடவில்லை. கூட்டணியில் விரிசல் ஏற்பட்டாலும் கூட நாம் அதை எதிர்கொள்ள வேண்டும். ஆனால், இந்த நோக்கத்தில் உறுதியாக இருக்க வேண்டும்” என்று பேசினார்.