
உத்தரப் பிரதேசம் மாநிலம், நொய்டா பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், நவராத்திரி தினத்தின் போது ஆன்லைன் செயலி மூலம் பிரபல ஹோட்டல் ஒன்றில் வெஜ் பிரியாணி ஆர்டர் செய்துள்ளார். அதன்படி, ஆன்லைன் செயலியின் ஊழியர், அவருக்கு உணவு பார்சலை டெலிவரி செய்துள்ளார்.
அந்த பார்சலை திறந்த அந்த இளம்பெண், அந்த பிரியாணியில் சிறிது சாப்பிட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது அதில் இருந்து சிக்கன் ஒன்று இருந்துள்ளது. பின்பு தான், தனக்கு வெஜ் பிரியாணிக்கு பதிலாக சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டிருக்கிறது என்பதை அந்த பெண் உணர்ந்துள்ளார். இதையடுத்து அந்த பெண் கண்ணீருடன் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
அதில், ‘நான் முழுமையான சைவப் பெண். ஆனால், அவர்கள் நவராத்திரி தினத்தின் போது எனக்கு சிக்கன் பிரியாணி வழங்கியுள்ளார்கள். அது தெரியாமல் நான் உணவில் சிறிதளவு சாப்பிட்டுவிட்டேன். இதைச் செய்தவர் வேண்டுமென்றே செய்திருக்கிறார். நான் வெஜ் பிரியாணி ஆர்டர் செய்தபோது அவர்களால் எப்படி அசைவத்தை அனுப்ப முடியும்?. சாப்பிட்ட பின்பு, ஹோட்டல் உணவகத்தை தொடர்பு கொள்ள முயன்றேன். ஆனால், அவர்களைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. ஆர்டர் செய்த உடனேயே அந்த உணவகம் மூடப்பட்டிருக்கிறது’ எனக் கண்ணீர் மல்கப் பேசினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.
இந்த வீடியோ வைரலானதை அடுத்து, போலீசார் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து ஹோட்டல் உரிமையாளரை கைது செய்தனர். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.