பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் பங்கேற்ற நிகழ்ச்சியில் வெடிகுண்டு வீசியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பீகார் மாநிலம், நாளந்தாவில் இன்று (12/04/2022) நடைபெற்ற ஜன்சபா நிகழ்ச்சியில் அம்மாநில முதலமைச்சரும், ஜனதா தள கட்சியின் தலைவருமான நிதிஷ்குமார் பங்கேற்றிருந்தார். நிகழ்ச்சியில் முதலமைச்சர் நிதிஷ்குமார் உரையாற்றிக் கொண்டிருந்த போது, நாட்டு வெடிகுண்டு ஒன்று வீசப்பட்டுள்ளது. இது நிகழ்ச்சி நடைபெறும் மேடைக்கு அருகே விழுந்து வெடித்ததால், பொதுமக்கள், ஜனதா தள கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவுகிறது.
இதனிடையே, நிகழ்ச்சி மேடையில் இருந்த முதலமைச்சர் நிதிஷ்குமாரை உடனடியாக பாதுகாப்புப் படையினர் மற்றும் காவல்துறையினர் பத்திரமாக காரில் அழைத்துச் சென்றனர். சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இது குறித்து தகவலறிந்த பீகார் காவல்துறையின் உயரதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு பொது விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் நிதிஷ்குமார் மீது பின்னால் வந்த நபர், அவரை முதுகில் அடித்தார். இந்த நிலையில், மீண்டும் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளதால், பீகார் மாநில முதலமைச்சருக்கு உச்சக்கட்ட பாதுகாப்பை வழங்க, தேவையான நடவடிக்கைகளை அம்மாநில காவல்துறை மேற்கொண்டு வருகிறது.
பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமாருக்கு 'Z+' பாதுகாப்பை மத்திய உள்துறை அமைச்சகம் வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.