நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் கடந்த 4 ஆம் தேதி தொடங்கியது. இந்த கூட்டத் தொடரானது வருகிற டிசம்பர் 22 ஆம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தொடரின் அலுவல்கள் நேற்று (13-12-23) வழக்கம்போல் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது, நாடாளுமன்ற வளாகத்தில் பார்வையாளர்களாக வந்திருந்த இரண்டு நபர்கள் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் மற்றும் திருமண கொண்டாட்டங்களில் பயன்படுத்தப்படும் வண்ண புகையை உமிழும் பட்டாசு போன்ற பொருட்களை எடுத்து அவை முழுக்க வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், நாடாளுமன்றத்துக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்ட இரண்டு பெண்களையும் போலீசார் கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனையடுத்து, இன்று (14-12-23) மக்களவை மற்றும் மாநிலங்களவை கூடியது. அப்போது, மற்ற அவை நடவடிக்கைகளை ஒத்தி வைத்துவிட்டு நாடாளுமன்ற பாதுகாப்பு பிரச்சனை தொடர்பாக விவாதிக்க வேண்டும் எனவும், இந்த சம்பவம் குறித்து அமித்ஷா விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோரிக்கை வைத்து அமளியில் ஈடுபட்டனர்.
இதனால், அவை நடவடிக்கைக்கு இடையூறு செய்யும் வகையில் செயல்பட்டதாகக் கூறி நாடாளுமன்ற உறுப்பினர்களான கனிமொழி, மாணிக்கம் தாகூர், சு.வெங்கடேசன், ஜோதிமணி உள்ளிட்ட 14 எம்.பி.க்கள், மாநிலங்களவையில் திரிணாமுல் காங்கிரஸை சேர்ந்த 1 எம்.பி என 15 எம்.பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து, இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பிக்கள் நாடாளுமன்றத்தில் உள்ளே இருந்து போராட்டம் நடத்தினர்.
இந்த நிலையில், 15 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் கூறியதாவது, “பாராளுமன்றத்தில் நடைபெற்ற பாதுகாப்பு மீறல் குறித்து விவாதம் நடத்தப்பட வேண்டும் எனக் கோரியதற்காக 15 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இது ஜனநாயகத்துக்கு எதிரானது. அவர்கள் செய்த குற்றம் என்ன?
பாதுகாப்பு குளறுபடி குறித்து மத்திய உள்துறை அமைச்சரை சபையில் விளக்கமளிக்க வலியுறுத்தியது குற்றமா? ஆபத்தான பாதுகாப்பு மீறல் குறித்து விவாதம் நடத்த கோரியது குற்றமா? இந்த நடவடிக்கை தற்போதைய காலகட்டத்தின் ஒரு அடையாளமான சர்வாதிகாரத்தின் கொடூரமான தன்மையை காட்டவில்லையா” என்று தெரிவித்துள்ளார்.