டெல்லி மதுபானக் கொள்கை தொடர்பான பணமோசாடி வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கடந்த மார்ச் மாதம் 21ஆம் தேதி கைது செய்யப்பட்டார். சுமார் 50 நாட்கள் திகார் சிறையில் அடைக்கப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவால், தன் மீதான கைது நடவடிக்கையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்து வந்த உச்சநீதிமன்றம் கடந்த 10ஆம் தேதி அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது. இதையடுத்து, அரவிந்த் கெஜ்ரிவால் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இதனிடையே டெல்லி மகளிர் ஆணையத்தின் முன்னாள் தலைவரும், ஆம் ஆத்மி கட்சி எம்.பியுமான ஸ்வாதி மாலிவால், போலீசாரிடம் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். இது தொடர்பாக கடந்த 13ஆம் தேதி காலை ஸ்வாதி மாலிவால் போலீசாரை தொடர்புகொண்டு, ‘டெல்லி முதல்வர் இல்லத்தில் அரவிந்த் கெஜ்ரிவாலின் தனிப்பட்ட உதவியாளரால் தாக்கப்பட்டேன்’ எனக் குற்றச்சாட்டு முன்வைத்திருந்தார்.
அந்தக் குற்றச்சாட்டின் அடிப்படையில், போலீசார் உடனடியாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் இல்லத்தை அடைந்த போது அங்கு எம்.பி.ஸ்வாதி மாலிவால் இல்லை என்று கூறப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இதற்கு பா.ஜ.கவினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து, ஆம் ஆத்மி எம்.பி சஞ்சய் சிங் கடந்த 14ஆம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “அரவிந்த் கெஜ்ரிவாலைச் சந்திக்க மாலிவால் அவரது இல்லத்திற்குச் சென்றிருந்தார். அவர் அவரைச் சந்திக்கும் அறைக்குள் காத்திருந்தபோது, உதவியாளர் பிபவ் குமார் அவரிடம் தவறாக நடந்து கொண்டுள்ளார். இது மிகவும் கண்டிக்கத்தக்க சம்பவம். கெஜ்ரிவால் இதை உணர்ந்து கடுமையான நடவடிக்கை எடுப்பார். ஸ்வாதி மாலிவால் நாட்டிற்கும் சமூகத்திற்கும் குறிப்பிடத்தக்க பணிகளை செய்துள்ளார். அவர் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர். நாங்கள் அனைவரும் அவருடன் நிற்கிறோம்” எனத் தெரிவித்தார்.
இந்த நிலையில், ஆம் ஆத்மி கட்சித் தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் ஆம் ஆத்மி எம்.பி சஞ்சய் சிங் ஆகியோர் இன்று (16-05-24) உத்தரப் பிரதேசத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினர். அப்போது அரவிந்த் கெஜ்ரிவாலிடம், ஸ்வாதி மாலிவால் விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். ஆனால், அரவிந்த் கெஜ்ர்வால் அருகில் அமர்ந்திருந்த அகிலேஷ் யாதவ், “மற்ற முக்கியமான தலைப்புகள் உள்ளன” எனப் பதிலளித்தார்.
அதனைத் தொடர்ந்து, இது குறித்து ஆம் ஆத்மி எம்.பி சஞ்சய் சிங் பேசியதாவது, “மணிப்பூரில் நடந்ததை பார்த்து ஒட்டுமொத்த நாடும் வேதனையில் ஆழ்ந்தது. ஆனால், பிரதமர் மோடி இந்த விவகாரத்தில் அமைதியாக இருந்தார். பிரஜ்வல் ரேவண்ணா ஆயிரக்கணக்கான பெண்களைப் பாலியல் பலாத்காரம் செய்தார். ஆனால் பிரதமர் மோடி, பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு வாக்கு கேட்டார். ஜந்தர் மந்தரில் எங்கள் மல்யுத்த வீரர்கள் போராட்டம் நடத்தியபோது, டெல்லி மகளிர் ஆணையத் தலைவராக இருந்த ஸ்வாதி மாலிவால் காவல்துறையினரால் தாக்கப்பட்டார். இந்த விவகாரங்களில் பிரதமர் மோடி அமைதியாக இருந்தார். ஆம் ஆத்மி கட்சி எங்கள் குடும்பம், தெளிவான அறிக்கையை அளித்துள்ளது. நான் குறிப்பிட்ட இந்த விவகாரங்களுக்கு பா.ஜ.க.வும், பிரதமர் மோடியும் பதிலளிக்க வேண்டும். தயவு செய்து இதில் அரசியல் விளையாட வேண்டாம்” என்று கூறினார். அரவிந்த் கெஜ்ரிவாலின் உதவியாளரால், தான் தாக்கப்பட்டதாக போலீசாரிடம் கூறிய ஆம் ஆத்மி எம்.பி ஸ்வாதி மாலிவால், இந்தச் சம்பவம் குறித்து போலீசாரிடம் எந்தவித புகாரும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.