தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. தேர்தல் முடிவுகளின்படி மேற்குவங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸ் மிகப்பெரும் வெற்றியை ஈட்டி ஆட்சியைத் தக்கவைத்துள்ளது. இதனையடுத்து அக்கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி, விரைவில் முதல்வராகப் பதவியேற்கவுள்ளார்.
இந்தநிலையில் மம்தா பானர்ஜி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் மேற்குவங்கப் பத்திரிகையாளர்கள் அனைவரையும் கரோனா முன்களப் பணியாளர்களாக அறிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், "எனக்கு ஒருவரிடம் இருந்து மெசேஜ் வந்தது. அதில், நான் மறு வாக்கு எண்ணிக்கைக்கு அனுமதியளித்தால், அது எனது உயிருக்கு ஆபத்தாக முடியும் என நந்திகிராமின் தேர்தல் அதிகாரி, யாரோ ஒருவருக்குக் கடிதம் எழுதியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆளுநர் கூட எனக்கு வாழ்த்து தெரிவித்தார். ஆனால் திடீரென எல்லாம் மாறிவிட்டது. முடிவுகளை அறிவித்த பின் அதனை எப்படி மாற்ற முடியும்? நாங்கள் நீதிமன்றம் செல்வோம்" எனக் கூறியுள்ளார்.
தொடர்ந்து மம்தா, "மேற்குவங்கத்தில் அனைவரும் அமைதி காக்க வேண்டும். எந்தவொரு வன்முறையிலும் ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். பாஜகவும் மத்திய படைகளும் நம்மை நிறைய சித்திரவதை செய்துள்ளன என்பது நமக்குத் தெரியும். ஆனால், நாம் அமைதி காக்க வேண்டும். நாம் தற்போது கரோனாவுடன் சண்டையிட வேண்டும். நாடு முழுவதும் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த ரூ.30,000 கோடியை ஒதுக்குமாறு நாங்கள் மத்திய அரசைக் கேட்டுக் கொள்கிறோம். மத்திய அரசு 2, 3 மாநிலங்களுக்கு அதிக தடுப்பூசிகள் மற்றும் ஆக்ஸிஜனை அனுப்புகிறார்கள் என்பதை அறிந்துகொண்டேன்" எனக் கூறியுள்ளார்.
மேற்குவங்கத்தில் வன்முறை ஏற்பட்டுள்ளதாக வெளியான தகவல்கள் குறித்து பதிலளித்துள்ள மம்தா, "பாஜகவினர் பழைய வன்முறைகளின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை பதிவிடுகிறார்கள். அது அவர்களின் வழக்கம். எனக்கு வன்முறை பிடிக்காது. பாஜக ஏன் அதைச் செய்கிறார்கள்? அறுதிப் பெரும்பான்மையயுடன் வெற்றி பெற்றும் நாங்கள் எந்த விதக் கொண்டாட்டத்திலும் ஈடுபடவில்லை" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், "நான் தெருவில் இறங்கிப் போராடுபவள். என்னால் பாஜகவை எதிர்த்துப் போராட மக்களை தட்டியெழுப்ப முடியும். ஒருவரால் எல்லாவற்றையும் தனியாகச் செய்ய முடியாது. நாம் அனைவரும் இணைந்து 2024 க்கான போராட்டத்தை நடத்தமுடியும் என நினைக்கிறேன். முதலில், கரோனாவை எதிர்கொள்வோம்" எனவும் தெரிவித்துள்ளார்.