புதுச்சேரியில் உள்ள ஜவஹர்லால் முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் (ஜிப்மர்) நடைபெற்ற விழாவில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, காரைக்கால் மாவட்டத்தை உள்ளடக்கிய விழுப்புரம் - நாகை இடையே ரூபாய் 2,426 கோடி மதிப்பில் 56 கி.மீ. தூரம் அமையும் நான்கு வழிச்சாலைப் பணிக்கு (NH45A) காணொளி மூலம் அடிக்கல் நாட்டினார்.
அதேபோல், ஜிப்மர் மருத்துவக் கல்லூரியின் காரைக்கால் கிளையில் ரூபாய் 491 கோடி மதிப்பிலான புதிய கட்டடத்திற்கும், சாகர்மாலா திட்டத்தின் கீழ் ரூபாய் 44 கோடியில் அமையவுள்ள சிறிய துறைமுகத்திற்கும், இந்திரா காந்தி விளையாட்டுத் திடலில் ரூபாய் 7 கோடியில் செயற்கை ஓடுதளம் அமைக்கவும் அடிக்கல் நாட்டிய பிரதமர், ஜிப்மரில் ரூபாய் 28 கோடியில் ஆராய்ச்சிக் கூடத்துடன் கூடிய ரத்த வங்கியையும், லாஸ்பேட்டையில் ரூபாய் 12 கோடியில் 100 படுக்கைகளுடன் கூடிய வீராங்கனைகளுக்கான விடுதியையும் காணொளி மூலம் திறந்து வைத்தார். மேலும், புதுச்சேரியில் ரூபாய் 15 கோடி மதிப்பில் கட்டப்பட்ட பாரம்பரிய மேரி கட்டடத்தையும் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். புதுச்சேரி வரலாற்றின் அடையாளமான மேரி கட்டடம் பிரெஞ்ச் கட்டட கலைப் பாணியில் கட்டப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் புதுச்சேரி துணைநிலை (பொறுப்பு) ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "புதுச்சேரியில் வாழும் மக்கள் பல மொழிகளைப் பேசினாலும் ஒற்றுமையின் அடையாளமாக திகழ்கின்றனர். புதுச்சேரி மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. காரைக்கால் - நாகை தேசிய நெடுஞ்சாலை மும்மதங்களின் முக்கியத் தளங்களை இணைக்கும். புதிய நான்கு வழிச்சாலை, புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும். கிராமப்புற, கடற்கரை இணைப்பை அதிகரிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
புதுச்சேரி மண் பன்முகத்தன்மையின் அடையாளம்; இங்கிருந்து பல்வேறு புரட்சியாளர்கள் வந்துள்ளனர். புதுச்சேரியின் புனிதத்தன்மை என்னை மீண்டும் இங்கே அழைத்து வந்திருக்கிறது. புதிய நான்கு வழிச்சாலை மூலம் காரைக்கால் மாவட்டத்தில் பொருளாதாரம் மேம்படும். நான்கு வழிச்சாலையால் திருநள்ளாறு சனீஸ்வரர் கோயில், வேளாங்கண்ணி பேராலயத்திற்கு எளிதாகச் செல்லலாம். சுகாதாரத்துறையில் முதலீடு செய்யும் நாடுகள் பிரகாசிக்கும். சுகாதாரத்துறைக்கு மத்திய அரசு பட்ஜெட்டில் அதிக நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. புதுச்சேரிக்கு மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும்" என்றார்.
அதைத் தொடர்ந்து பேசிய பிரதமர், "மாணவர்களுக்கு கல்விதான் சிறந்த செல்வம்" என்பதற்கு 'கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு மாடல்ல மற்றை யவை' என்ற திருக்குறளை மேற்கோள்காட்டினார்.
இதனிடையே, புதுச்சேரியில் பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, கருப்புக்கொடி காட்டி, கருப்பு பலூன் பறக்கவிட்ட சுமார் 30 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.