நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்குத் தரக்கோரி, டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தமிழக அனைத்துக் கட்சிக் குழு இன்று (17/01/2022) மாலை சந்தித்தது. தி.மு.க.வின் மக்களவைக் குழு தலைவர் டி.ஆர்.பாலு தலைமையிலான தமிழக கட்சிகளின் பிரதிநிதிகள் குழு மத்திய உள்துறை அமைச்சரைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியது.
இந்த சந்திப்பின் போது, நாடாளுமன்ற உறுப்பினர்கள் வைகோ (ம.தி.மு.க.), ஜெயக்குமார் (காங்கிரஸ்), நவநீதகிருஷ்ணன் (அ.தி.மு.க.), ரவிக்குமார் (வி.சி.க) மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி (பா.ம.க.), நடராஜன் (சி.பி.எம்), ராமச்சந்திரன் (சி.பி.ஐ.) உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த டி.ஆர்.பாலு, குடியரசுத் தின அணிவகுப்பில் தமிழக ஊர்தி நிராகரிப்பு குறித்து விசாரிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதியளித்ததாகத் தெரிவித்தார்.
மூன்று முறை சந்திப்பு ரத்தான நிலையில், நான்காவது முறையாக மத்திய உள்துறை அமைச்சரை தமிழக அனைத்துக் கட்சிக் குழு சந்தித்தது என்பது குறிப்பிடத்தக்கது.