மத்திய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் 24வது நாளை எட்டியுள்ளது. இந்தநிலையில் வேளான் சட்டங்கள் சிறு-குறு விவசாயிகளின் நலனை பாதிக்கும். எனவே சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என இந்திய பல்கலைக்கழங்களை சேர்ந்த பத்து பொருளாதார நிபுணர்கள், மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
பொருளாதார நிபுணர்கள் அந்த கடிதத்தில், "கோடிக்கணக்கான சிறு விவசாயிகளின் நலனுக்காக விவசாய சந்தைப்படுத்தல் முறையில் மேம்பாடுகள் மற்றும் மாற்றங்கள் தேவை என்று நாங்கள் நம்புகிறோம், ஆனால் இந்த சட்டங்களால் கொண்டுவரப்பட்ட சீர்திருத்தங்கள் அந்த நோக்கத்தை நிறைவேற்றவில்லை" என கூறியுள்ளனர். மேலும் அவர்கள், வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டுமென கூறி அதற்கான காரணங்களையும் முன்வைத்துள்ளனர்.
பொருளாதார நிபுணர்கள் முன்வைத்துள்ள காரணங்கள்:
வேளாண் சந்தைகளை ஒழுங்குபடுத்துவதில் மாநில அரசாங்கத்தின் பங்கை மீறும் மற்றும் குறைக்கும் சட்டத்தை மத்திய அரசு உருவாக்குவது ஒரு குறைபாடுள்ள அணுகுமுறையாகும். மாநில அரசு இயந்திரங்களே கிராம மட்டம் அளவிற்கு உள்ள விவசாயிகளுக்கும் அணுகக்கூடியவையாக இருக்கும். இந்த வேளாண் சட்டங்களால் இரண்டு சந்தைகள், வேறு வேறு விதமான விதிமுறைகளோடு உருவாகும். சந்தைகளில், ஏகபோக உரிமை ஏற்படும். இந்த சட்டங்கள் விவசாயிகளுக்கு போதுமான பாதுகாப்பை வழங்காது. மாநில அரசின் கட்டுப்பாடுகள் இல்லாததால், வேளாண் சந்தையில் பெருநிறுவனங்களின் ஆதிக்கம் ஏற்படும்.
இந்த காரணங்களை கூறி பொருளாதார நிபுணர்கள், வேளாண் சட்டங்களைத் திரும்ப பெற வேண்டும் என,மத்திய வேளாண் அமைச்சருக்கு எழுதிய கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளனர்.