பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. மாநிலத்தின் முதல்வராக ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் நிதிஷ்குமார் உள்ளார். இந்நிலையில், பீகார் மாநிலத்தில் நடத்தப்பட்ட சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு விபரங்களை அம்மாநில அரசு வெளியிட்டிருந்தது. பீகார் மாநில அரசு நாட்டிலேயே முதன் முறையாக சாதிவாரியான கணக்கெடுப்பு விவரங்களை வெளியிட்டுள்ளது. பீகார் மாநில அரசின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். மேலும், இதே போல் ஒவ்வொரு மாநிலத்திலும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர்.
அதே வேளையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மத்தியப் பிரதேசத்தில் பேசிய ராகுல் காந்தி, காங்கிரஸ் மத்தியில் ஆட்சிக்கு வந்தால், சமூகத்தின் அனைத்து பிரிவினரும், குறிப்பாக பிற்படுத்தப்பட்ட மக்களும் பயன்பெறும் வகையில் நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில், மத்தியப் பிரதேசத்தின் பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, சாதியை வைத்து நாட்டை பிளவுபடுத்த முயற்சி செய்து வருகின்றனர் என்று சாடியுள்ளார்.
மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள குவாலியர் பகுதிக்கு பிரதமர் மோடி நேற்று வந்தார். அப்போது அவர், 19,000 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்து பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். அதில் பேசிய அவர், “காங்கிரஸின் 60 ஆண்டுகால ஆட்சியில் நாட்டி வளர்ச்சி பாதைக்காக எந்தவித நல்லதையும் அவர்கள் செய்யவில்லை. ஆனால், பா.ஜ.க தலைமையிலான அரசு பொறுப்பேற்ற இந்த 9 ஆண்டுகளில் நாடு பல்வேறு வளர்ச்சி பாதைகளுக்கு சென்று கொண்டிருக்கிறது. இந்த உலகமே இந்திய நாட்டின் பெருமையை பாடிக்கொண்டிருக்கிறது. இந்த 9 ஆண்டுகளில் இத்தனை நல்லது செய்ய முடியும் போது ஏன் அவர்களால் 60 ஆண்டுகளில் செய்ய முடியவில்லை?.
பா.ஜ.க ஆட்சியில் நாடு பல்வேறு துறைகளில் முன்னேறி வருவதை எதிர்க்கட்சிகளால் சகித்துக்கொள்ள முடியவில்லை. இந்தியாவை உலகம் முழுவதும் பாராட்டுவதை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சாதியின் பெயரால் நாட்டை பிளவுபடுத்த எதிர்க்கட்சிகள் முயற்சி செய்து வருகின்றன. அன்றைக்கு, சாதி அடிப்படையில் ஏழைகள் மற்றும் பிளவுபட்ட சமூகத்தின் உணர்வுகளுடன் விளையாடினார்கள். இன்றைக்கும் அதே பாவத்தை செய்கின்றனர். தேசம் மற்றும் அதன் கொள்கைகளின் எதிரான வெறுப்பு மட்டும் தான் அவர்கள் மனதில் இருக்கிறது. இந்த வெறுப்பின் மூலம் நாட்டின் சாதனைகளை அவர்கள் மறந்துவிடுகிறார்கள்” என்று கூறினார்.