உலகின் பல்வேறு நாடுகள் தடுப்பூசியின்றி தடுமாறிவரும் நிலையில், அமெரிக்கா இம்மாத இறுதிக்குள் 8 கோடி தடுப்பூசிகளை உலக நாடுகளுடன் பகிர்ந்துகொள்ள இருக்கிறது. இதில் முதற்கட்டமாக விரைவில் 2.5 கோடி கோடி தடுப்பூசிகளை அமெரிக்கா பகிர்ந்துகொள்ள இருக்கிறது. இந்தநிலையில், அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ், சில வெளிநாட்டு தலைவர்களுடன் நேற்று (03.06.2021) பேசினார். அப்போது இந்திய பிரதமர் மோடியுடனும் அவர் உரையாடினார்.
இந்த உரையாடலின்போது, இந்தியாவிற்குத் தடுப்பூசி தருவதற்கு கமலா ஹாரிஸ் உத்தரவாதம் அளித்துள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், "சிறிது நேரத்திற்கு முன்பு அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸுடன் பேசினேன். உலகளாவிய தடுப்பூசி பகிர்வுக்கான அமெரிக்காவின் வியூகத்தில் ஒரு பகுதியாக, இந்தியாவுக்குத் தடுப்பூசி வழங்குவதற்கான உத்தரவாதம் அளிக்கப்பட்டதற்கு நான் மிகவும் நன்றி பாராட்டுகிறேன். அமெரிக்க அரசு, வணிக நிறுவனங்கள், இந்திய புலம்பெயர்ந்தோர் ஆகியோரிமிருந்து வெளிப்படும் ஆதரவு மற்றும் ஒற்றுமைக்காக நான் அவருக்கு நன்றி தெரிவித்தேன்" என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், "இந்தியா - அமெரிக்க தடுப்பூசி ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்காக தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் முயற்சிகள் குறித்தும், கரோனாவிற்குப் பிந்தைய உலக சுகாதாரத்திலும், பொருளாதார மீட்சியிலும் எங்கள் கூட்டணி பங்களிப்பதற்கான சாத்தியங்கள் குறித்தும் நாங்கள் விவாதித்தோம்" என கூறியுள்ளார்.