சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு நவம்பர் 13, 14 தேதிகளில் நடைபெற இருந்தது. இந்தநிலையில், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இந்த சூப்பர் ஸ்பெஷாலிட்டி நீட் தேர்வு புதிய பாடத்திட்டத்தின்படி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து கடைசி நேரத்தில் தேர்வுக்கான பாடத்திட்டத்தை மாற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 41 முதுகலை மருத்துவர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நேற்று (05.10.2021) விசாரணைக்கு வந்தபோது, புதிய பாடத்திட்டத்தின்படி மருத்துவர்கள் தயாராகும் வகையில் ஜனவரி மாதத்திற்கு தேர்வை ஒத்திவைக்க தயார் என மத்திய அரசு தெரிவித்தது.
ஆனால் வழக்கை தொடர்ந்து விசாரித்த உச்ச நீதிமன்றம், "மருத்துவத் தொழிலும் கல்வியும் வியாபாரமாகிவிட்டன. இப்போது, மருத்துவக் கல்வியின் ஒழுங்குமுறையும் அந்த வழியில் போய்விட்டது. இது தேசத்தின் துயரம்" என தெரிவித்ததோடு, இந்த ஆண்டிற்கான சூப்பர் ஸ்பெஷாலிட்டி நீட் தேர்வில் பழைய பாடத்திட்டத்தையே பயன்படுத்த 24 மணிநேரத்தில் முடிவெடுக்குமாறு உத்தரவிட்டது.
இதனையடுத்து இன்று மத்திய அரசு, இந்த ஆண்டிற்கான சூப்பர் ஸ்பெஷாலிட்டி நீட் தேர்வு பழைய பாடத்திட்டத்தின்படி நடைபெறும் எனவும், பாடத்திட்ட மாற்றம் அடுத்த ஆண்டு முதல் அமலுக்கு வரும் எனவும் அறிவித்தது. இதனையடுத்து, உச்ச நீதிமன்றம் முதுகலை மருத்துவர்கள் தொடர்ந்து வழக்கை முடித்து வைத்தது.