’உலக கோப்பை கால்பந்தாட்டத்தில் பிரான்ஸ் அணி வென்றது புதுச்சேரி மக்களே வென்றது போல உணர்கிறார்கள்’ என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பெருமிதமாக தெரிவித்துள்ளார்.
21வது உலகக்கோப்பை கால்பந்து போட்டி கடந்த மாதம் 14-ஆம் தேதி ரஷ்யாவில் தொடங்கியது. 32 அணிகள் பங்கேற்ற இந்த கால்பந்து திருவிழாவில் ஐரோப்பிய அணிகளான பிரான்சும், குரோஷியாவும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. இப்போட்டி நேற்று இரவு 8.30 மணிக்கு துவங்கி 10.30 மணிக்கு நிறைவடைந்தது. இதில் குரேஷிய அணியை 4-2 என கோல் கணக்கில் பிரான்ஸ் அணி வீழ்த்தி 2வது முறையாக உலகக்கோப்பையை கைப்பற்றியது.
இப்போட்டியை புதுச்சேரி கடற்கரைக்கு வரும் சுற்றுலா பயணிகள் காணும் வகையில், சுற்றுலாத்துறை சார்பில் லே கபே உணவகத்தின் மாடியில் பிரமாண்ட எல்இடி திரை அமைக்கப்பட்டு இறுதிப்போட்டி ஒளிபரப்பப்பட்டது.
இதனை முதலமைச்சர் நாராயணசாமி, அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ், வளர்ச்சி ஆணையர் அன்பரசு, ஐஜி சுரேந்தர சிங் யாதவ் மற்றும் வெளிநாடு, வெளி மாநில சுற்றுலா பயணிகள் பொதுமக்கள் என 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கண்டு ரசித்தனர்.
இப்போட்டியில் பிரான்ஸ் வெற்றி பெற்றதை அடுத்து அவர்கள் உற்சமாக குரல் எழுப்பி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தொடர்ந்து பிரான்ஸ் அணி வெற்றி பெற்ற பின்பு முதலமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது "புதுச்சேரி பிரெஞ்சு காலனியின் கீழ் இருந்த பகுதியாகும். பிரான்சுக்கும் நமக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. புதுச்சேரியை சேர்ந்தவர்கள் நிறைய பேர் பிரான்ஸில் வேலை செய்கின்றனர்.
இந்நிலையில் கால்பந்து உலகக் கோப்பை போட்டியில் பிரான்ஸ் வெற்றி பெறும் என்று நம்பிக்கையுடன் கூறியிருந்தேன். அந்த நம்பிக்கை வீண் போகவில்லை. உலகக்கோப்பையை வென்ற பிரான்ஸ் கால்பந்து அணி வீரர்களுக்கு என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். இறுதி போட்டியில் பிரான்ஸ் வெற்றி பெற்றது, புதுச்சேரி மாநில மக்களுக்கு அவர்களே வெற்றி பெற்றது போல் உள்ளது" என்று தெரிவித்தார்.